×

நெல் பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி, நவ.6: நெல் பயிரில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி வட்டாரத்தில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 3 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வேட்டியம்பட்டி, அகசிப்பள்ளி, கிருஷ்ணகிரி, மூங்கில்புதூர், பெத்ததாளப்பள்ளி, தேவசமுத்திரம், பெரியமுத்தூர், கும்மனூர், கட்டிகானப்பள்ளி, மாதேப்பட்டி, கெங்கலேரி, கூலியம், நெக்குந்தி, அவதானப்பட்டி ஆகிய கிராமங்களில் தற்போது நிலவும் சீதோசன நிலை காரணமாக நெல்லில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது.

ஆனைக்கொம்பன் பூச்சி நெற்பயிரின் தண்டு பகுதியின் அடிப்பகுதியில் முட்டைகளை இடும். இளம் புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் நெற்பயிரின் தண்டினை துளைத்து உள் செல்லும். தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிரின் இலைகள் மேற்கொண்டு வளராமல், வெங்காய இலை போல குழலாக மாறிவிடும். இது வெள்ளிக்குருத்து அல்லது வெங்காய இலைசேதம் என்று அழைக்கப்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட தூர்கள் பார்பதற்கு யானைத்தந்தம் போன்று காணப்படுவதால் ஆனைக்கொம்பன் என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தூர்களில் இருந்து கதிர்கள் வெளிவராது. சரியான பயிர் பாதுகாப்புகளை மேற்கொள்ளாவிட்டால் விளைச்சல் அதிக அளவில் பாதிக்கப்படும். இதனை கட்டுப்படுத்த, அறுவடைக்கு பின் எஞ்சி நிற்கும் தாகள், களைகளை அழித்துவிட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரம் இட வேண்டும். கார்போசல்பான் 25 தசவீதம் 800&1000 மி.லி., குளோரோபைரிபாஸ் 20 சதவீதம் 1250 மி.லி., பைப்ரோனில் 5 சதவீதம் 1000 & 1500 மி.லி என இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு எக்டேருக்கு தெளித்து பூச்சியின் தாக்குதலில் இருந்து பயிரை காப்பாற்றலாம். பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : attack ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...