×

ஒரு மாதத்தில் 17 பேர் பலி குழந்தைகளை ஏரி, குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது

கிருஷ்ணகிரி, நவ.6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி ஒரு மாதத்தில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், குழந்தைகளை ஏரி மற்றும் குளம், குட்டைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.தளி ஒன்றியம் சாரண்டப்பள்ளி ஊராட்சி, கெலமங்கலம் ஒன்றியம் தாவக்கரை மற்றும் பிதிரெட்டி ஆகிய ஊராட்சிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் புறத்தொடர்பு பணியாளர் சுதாகர் பங்கேற்று விளக்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், குழந்தைகளை ஏரி, குளம், குட்டைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 குழந்கைள் ஏரி, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். மேலும் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. அவ்வாறு திருமணம் செய்தால், அதற்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் சிலர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு, இளம்சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்படுகின்றனர். இதனால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். எனவே, குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்