×

தர்மபுரி வானொலி நிலையம் ஒலிபரப்பு நேரம் நீட்டிப்பு

தர்மபுரி, நவ.6: தர்மபுரி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நேர நீட்டிப்புக்கு நேயர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தர்மபுரி பண்பலை 102.5 வானொலி நேயர்கள் சங்கச் செயலாளர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய வானொலியின் தர்மபுரி பண்பலை வானொலி நிலையம், கடந்த 2.10.2007ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது நாள்தோறும் 2 மணி நேரம் மட்டும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்பினரின் தொடர் முயற்சியினால், மீண்டும் கடந்த 1.11.2014ம் தேதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானது. ஆனால், நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை சென்னை பண்பலை நிகழ்ச்சிகளே ஒலிபரப்பட்டன. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், கிராம முன்னேற்றம் ஆகியவற்றிற்காக எவ்வித நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகவில்லை.

எனவே, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில், நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, முழு நேரம் ஒலிப்பரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பினர், நேயர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரிடம் நேயர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதன்பேரில், அவர், சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்து, தர்மபுரி வானொலி நிகழ்ச்சிகளை முழுநேரம் ஒலிப்பரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில், இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காலை 5.55 முதல் இரவு 11.05 வரை ஒலிபரப்பு நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதன்மூலம் நேயர்களின் நீண்ட நாள் கோரிக்கை நனவாகியுள்ளது. எனவே, இதற்காக நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், பிரசார் பாரதியின் முதன்மை செயல் அலுவலர், வானொலியின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா