×

அதிகாரிகள் உடந்தை என புகார் மணிமுக்தா அணை குடிமராமத்து பணியில் முறைகேடு

கள்ளக்குறிச்சி, நவ. 6:  கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராம எல்லை பகுதியில் மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து பாசன வாய்க்கால் குடிமராமத்து பணி மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்திடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் மதகுகள் மற்றும் ஷெட்டர்களில் குடிமராமத்து பணி மேற்கொள்வதற்காக அரசு ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பணிகளை மேற்கொள்ளாமல் முழுமையாக செய்து முடித்துவிட்டதாக கூறி சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான தொகையை போலியாக பில் வைத்து பணம் எடுத்து விட்டனர். இந்த பணிகள் நடைபெற்றதா என்பது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஆய்வு செய்யாமல் சங்கதலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டு முறைகேடாக பில் எடுக்கப்பட்ட தொகையில் பங்கீடு செய்து கொண்டனர்.    

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாய்க்காலில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. மேலும் மதகுகளோ, ஷெட்டர்களோ அமைக்கப்படவில்லை. வாய்க்காலுக்கு குறுக்கே செல்கின்ற தார்சாலை பகுதியில் இருபுறமும் சில மீட்டர் தூரம் மட்டுமே மண் கொட்டப்பட்டுள்ளன. பாசன வாய்க்கால் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை தட்டிக்கேட்டால் அதிகாரிகள் துணையுடன் ஆவணங்கள் சரியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, இதுவரை மேற்கொள்ளப்படாத பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட பாசன வாய்க்கால் சங்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Manmukta Dam ,
× RELATED பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500...