×

கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

சின்னசேலம், நவ. 6: கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கோமுகி அணை முதன்மை கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகளும், விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் அணைமுன்பு திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார்  5 000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின் போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோர் மாதம் திறந்து விடப்படுவது வழக்கம்.  

இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால்  பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து உள்ளது. அதைப்போல கல்வராயன்மலையில் இருந்து கல்பொடை, பொட்டியம், மாயம்பாடி  ஆறுகளில்  இருந்தும் கோமுகி அணைக்கு அதிக நீர்வரத்து இருந்தது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீரை அதிகபட்சமாக 1500 கனஅடி வரை கோமுகி ஆற்றில் திறந்து விட்டனர். தற்போதும் உபரி நீர் ஆற்றில்தான் திறந்து விடப்படுகிறது. அதனால் ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு பயன் உள்ளது. ஆனால் சம்பா பருவ சாகுபடிக்காக நாற்று விடுதல் உள்ளிட்ட நடவு பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் கோமுகி அணையின் முதன்மை கால்வாயில் இருந்து நீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணை நிரம்பி 3 நாட்கள் ஆகியும் இன்னும் அணை திறக்கவில்லை. அதைப்போல கோமுகி அணை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அக்டோபர் 30ம் தேதி அணையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோமுகி அணையை திறக்க அரசு முன்வரவில்லை. ஆனால் அதே தேதியில் மற்ற இடங்களில் பாசனத்திற்கு அணையை திறந்ததாக தெரிகிறது. இதனால் கோமுகி அணை முதன்மை கால்வாயை நம்பி உள்ள சுமார் 40 கிராமங்களை சேர்ந்த  5000 ஏக்கர் பாசன விவசாயிகள் பலர்  நாற்று விட்ட நிலையில் வயலை உழுவலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.  குறிப்பாக கடைமடை பாசன விவசாயிகள் நாற்று விடலாமா என்றே யோசனையில்  உள்ளனர்.

இதற்கிடையே கோமுகி அணையை பாசனத்திற்கு திறக்காததை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் பாஜவை சேர்ந்த நகர தலைவர் ராமு முன்னிலையில் பாசன விவசாயிகள் ராஜா, ராமு, சின்னதுரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோமுகி அணையின் முதன்மை பாசன கால்வாய் முன்பு திரண்டு கோஷம் போட்டனர். அதில் அணையை உடனே திறக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்தும் கோஷம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு எஸ்ஐ ராஜேந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு கோமுகி அணை உதவி பொறியாளர் சுதர்சனும் வந்து பேசினார். மேலும் கோமுகி அணையை வரும் 8ம் தேதி கண்டிப்பாக பாசனத்திற்கு திறப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.   

Tags : Komukhi Dam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி...