×

புதுச்சேரி மாஸ்டர் பிளான் வெளியீடு அடுக்குமாடி கட்டிடங்கள் உயரம் 40 மீட்டராக அதிகரிப்பு

புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரிக்கான மாஸ்டர் பிளான் கடந்த 1982ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புதுச்சேரி பகுதி முழுமைக்கும் இல்லாமல், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி (பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, ஆலங்குப்பம் ஆகிய பகுதி நீங்கலாக) ஆகிய இரண்டு நகராட்சிகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது. மொத்த பரப்பளவு 294 சதுர கிலோ மீட்டர். 1982ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் மாஸ்டர் பிளானில் 41.97 சதுர கிலோ மீட்டர் மட்டுமே கொண்டுவரப்பட்டது. 1997ம் ஆண்டில் முதல் மாஸ்டர் பிளான் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. ஆனால் 41.91 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மட்டுமே என்பதில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை. பெருகி வரும் மக்கள் தொகை எதிர்கால தேவைகள் அடிப்படையில் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்க புதுவை நகர மற்றும் கிராம அமைப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான கமிட்டி அமைக்கப்பட்டு அகமதாபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் 2015ம் ஆண்டில் துவங்கியது.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள், வில்லியனூர், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூர், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன்களை உள்ளடக்கியும், புதுச்சேரியின் மொத்த பரப்பளவான 294 சதுர கிலோ மீட்டர் உள்ளடக்கி, புதிய மாஸ்டர் பிளான் சேட்டிலைட் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2036ம் ஆண்டில் மக்கள் தொகை 16.3 லட்சமாக இருக்கும் என கணக்கிட்டு, என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதில் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் மாஸ்டர் பிளான் 2036 தயாரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெளிவட்டபாதை, உள் வட்ட பாதை, ரயில் தடங்கள், விமான நிலைய விரிவாக்கம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அரசு அலுவலகங்களை எங்கே அமைப்பது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமையும் இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திடக்கழிவு மேலாண்மைப்படி குப்பை கொட்டும் இடங்களும் அடையாளம் காணப்பட்டிருக் கிறது. இந்த மாஸ்டர் பிளான் மூலமாக திட்டமிட்டு முறையாக நகர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

குடியிருப்பு பகுதியாக காட்டப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே லே அவுட் போட முடியும். கட்டிட பரப்பு விகிதாச்சாரம் (எப்.ஏ. ஆர்) 2 மாடி கட்டிடங்களுக்கு 180லிருந்து 220 ஆகவும், உயர்ந்த கட்டிடங்களுக்கு 250லிருந்து 300 ஆகவும் மாஸ்டர் பிளானில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பரப்பளவில் கட்டிடங்களை அமைக்கலாம். சாதாரண கட்டிடங்களுக்கான உயரம் 15 மீட்டரில் இருந்து 17 மீட்டராகவும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கான உயரம் 30லிருந்து 40 மீட்டராகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலும் பல தகவல் அடங்கிய மாஸ்டர் பிளான் புதுச்சேரி நகர அமைப்பு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Puducherry Master Plan Launch Apartments Buildings ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...