×

எண்ணெய்வித்து பயிர்களில் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

புதுச்சேரி, நவ. 6:  புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, குருமாம்பட்டு பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடியை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி தவளக்குப்பம் உழவர் உதவியகத்துக்கு உட்பட்ட பூரணாங்குப்பத்தில் நடந்தது. உழவியல் நிபுணர் ரவி வாழ்த்தி பேசினார். எண்ணெய் வித்து பயிர்களின் முக்கியத்துவத்தை பற்றி பயிற்சி வழி தொடர்பு திட்டம் கூடுதல் வேளாண் இயக்குநர் வசந்தகுமார் எடுத்துரைத்தார். பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்பங்களையும், எண்ணெய்வித்து பயிர்களின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். பயிற்சியை வேளாண் துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி துவக்கி வைத்தார்.

உழவியல் நிபுணர் ரவி, எண்ணெய்வித்து பயிர்களில் அதிக மகசூல் பெற உழவியல் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விதையியல் வல்லுநர் விஜயகீதா, எண்ணெய்வித்து பயிர்களின் விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் இணை வேளாண் இயக்குநர் பூமிநாதன், துணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். வேளாண் அதிகாரி சிவசுப்பிரமணி நன்றி கூறினார். பயிற்சியில், புதுச்சேரி தவளக்குப்பம் உழவியல் உதவியக பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்துறை அதிகாரிகள், உதவி வேளாண் அலுவலர், களப்பணியாளர்கள், செயல்விளக்க உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...