×

கீழ்புத்துப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த மரங்கள் அடியோடு அகற்றம்

காலாப்பட்டு, நவ. 6:  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சங்குப்பம், ரங்கநாதபுரம், கெங்கை நகர், அனிச்சங்குப்பம், கீழ் புத்துப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக அனுமந்தை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கூறிய பகுதிகளில் உள்ள மின்கம்பிகளில் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் உரசுவதாக கூறி, அப்பகுதிகளில் உள்ள மரங்களை மின்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோரம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மாமரம், புளியமரம், வேப்பமரம், பூவரசு மரம் உள்ளிட்ட பல மரங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெட்டி அகற்றுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், மின்கம்பிகளில் உரசுவதாக கூறி கீழ் புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்களை வெட்டி வருகின்றனர். மின்கம்பிகளை உரசினால் சம்பந்தப்பட்ட கிளைகளை வெட்டுவதுதான் வழக்கம். ஆனால் தற்போது மரங்களை அடியோடு வெட்டி வருகின்றனர். ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் கடுமையாக சிரமப்படுகிறோம். இதை மின்துறையினர் சர்வ சாதாரணமாக வெட்டி விட்டு போகிறார்கள். இந்த செயல் எங்களை கடுமையாக பாதித்துள்ளது என்றனர். மேலும் இவ்விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். எனவே, விழுப்புரம் மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,roadside ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...