×

பயனாளிகள் திருப்பி செலுத்தாவிட்டால் ஜாமீன்தாரரின் சம்பளத்தில் கடனை வசூலிக்க நடவடிக்கை

புதுச்சேரி, நவ. 6:  புதுவை ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலை கழக மேலாண் இயக்குனர் (பாட்கோ) மேலாண் இயக்குநர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுவை ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகமானது புதுச்சேரி மாநிலத்தில் வாழும் ஆதிதிராவிட இன மக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை அளித்து, அவர்கள் வாழ்வில் கல்வி, பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்ற உயரிய குறிக்கோேளாடு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற கல்விக்கடனும் வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் கடன் தொகையை உரிய காலக்கெடுவுக்குள் வசூலித்து அதை தேசிய அட்டவணை இன மேம்பாட்டு கழகங்களுக்கும் மற்றும் புதுச்சேரி அரசுக்கும் திரும்ப செலுத்தி புதிய கடன்கள் பெற வேண்டிய நிலையில் உள்ளது. பொதுவாக பல பயனாளிகள் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், இக்கழகமானது கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. புதிய பயனாளிகளுக்கும், புதிய மாணவ, மாணவிகளுக்கும் கல்விக்கடன் தொகையை உரிய காலத்தில் வழங்க முடியாத நிலையில் உள்ளது.

எனவே, வாரா கடன்களை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் பாட்கோ நிறுவனம் உள்ளது. கடந்த 6-10-2018 மற்றும் 6-3-2019 அன்று கவர்னரின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இக்கழகத்தின் கடன் வசூல் பணியை தீவிரப்படுத்தி நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் வசூல் செய்யும்படி பணித்துள்ளார்கள். நிலுவை தொகையை வசூல் ெசய்து புதிய மாணவ, மாணவிகளுக்கும் உரிய கடன் தொகையை வழங்குமாறும், அதன் அடிப்படையில் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு சம்பளத்திற்கான அரசின்  கொடை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். எனவே, புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற்ற அனைத்து பயனாளிகளும், தங்களின் கடன் தொகையை உடனே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயனாளிகள் தங்கள் கடன் தொகையை திரும்ப செலுத்த தவறினால், அவர்களுக்கு ஜாமீன் அளித்தவர்களின் சம்பளத்தில் இருந்து கடன்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, ஜாமீன்தாரர்கள் பயனாளிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி கடன்தொகையை செலுத்த கேட்டுக் கொள்ள வேண்டும். இறுதியாக, ஜாமீன்தாரர்களின் ஓய்வூதிய பலன்களில் இருந்தும், கடன்தொகையை வசூலிக்கும்படி கணக்குகள் மற்றும் கருவூலகத் துறைக்கு வேண்டுகோள் வைக்கப்பட உள்ளது. எனவே, இக்கழகம் மூலம் கடனுதவி பெற்ற அனைத்து பயனாளிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்கள் பெற்ற கடனை அசல் மற்றும் வட்டியுடன் இக்கழகத்தில் செலுத்துமாறும், ஜாமீன்தாரரின் சம்பளத்தில் இருந்து கடன்தொகையை வசூலிப்பதையும் மற்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : bailiff ,
× RELATED மாநகர் போக்குவரத்துக்கழகம் அரசுக்கு...