புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்

புதுச்சேரி,  நவ. 6:  புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து போடப்படும் சிறுகடைகளால் பொதுமக்கள் தினமும் அவதியுறும் நிலை உள்ளது. முக்கிய சாலைகளில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய கலெக்டர், இங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரி நேரு வீதியில் பெரிய மார்க்கெட் (குபேர் அங்காடி) உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல்வேறு பொருட்களை இங்கு வாங்கிச் செல்கின்றனர். மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் ஆங்காங்கே தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் கிழக்கு டிராபிக் போலீசார் அவ்வப்போது அங்கு கண்காணிப்பு மேற்கொண்டு அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பெரிய மார்க்கெட்டில் தற்போது நடைபாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் போடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் உள்ளே சென்று பொருட்களை வாங்கி வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர்த்து கூடுதலாக கடைகளை விரித்து நடைபாதையில் காய்கறி, பொருட்களை வியாபாரம் செய்வதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒருவரையொருவர் நெரித்து தள்ளியபடியும், வாங்கிய பொருட்களை பைகளில் எடுத்துச் செல்ல போதிய வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக மார்க்கெட் கடைகளில் அடிகாசு வசூலிப்பதில் மட்டுமே நகராட்சி பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும் புலம்புகின்றனர். சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய மாவட்ட கலெக்டர் அருண், பெரிய மார்க்கெட் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Shops ,corridor ,Puducherry ,
× RELATED நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில் தீ 3 கடைகள் எரிந்து சாம்பல்