×

புதுவை காவல்துறையில் அதிகரிக்கும் காலி பணியிடங்கள் : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ. 6:  புதுச்சேரி காவல்துறையில் காலி பணியிடங்கள் மாதந்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பணிச்சுமை அதிகரித்து வருவதால் போலீசார் குமுறி வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. புதுச்சேரி காவல்துறையில் 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். இங்கு டிஜிபி, ஐஜி, டிஜிபி, சீனியர் எஸ்பிக்கள் பதவி
களில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்டோர் பிபிஎஸ் (புதுச்சேரி போலீஸ் சர்வீஸ்) அதிகாரிகள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரி காவல்துறையில் காலியிடங்கள் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதிய ஆட்கள் இப்பணிக்காக ேதர்வு எதுவும் செய்யப்படாத நிலையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது.
இது ஒருபுறமிருக்க அதிகாரிகள் மத்தியிலும் வேலைப்பளு அதிகமாகி உள்ளது. காவல்துறை தலைமையகத்தை கண்காணிக்கும் எஸ்பி நல்லாம் கிருஷ்ணபாபுவிடம் ஆயுதப்படை, பிஓபி ஆகியவற்றை கூடுதலாக கவனித்து வருகிறார். இதேபோல் சுபம் கோஷிடம் காவலர் பயிற்சி பள்ளி மட்டுமின்றி சைபர் க்ரைம், சிபிசிஐடி, காவலர் நலம் உள்ளிட்ட பிரிவுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் எஸ்பி ராஜசேகர வல்லட்டிடம் டிராபிக் காவல் தலைமையகம் மட்டுமின்றி ஊர்க்காவல் படையையும் கவனித்து வருகிறார்.

அதேவேளையில், 3 வருடமாக விஜிலென்ஸ் பிரிவுக்கு எஸ்பி நியமிக்கப்படாமல் அப்பதவி காலியாகவே கிடக்கிறது. அதுமட்டுமின்றி காரைக்கால் தெற்கு, கடலோர காவல்படை பிரிவுக்கு எஸ்பி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதோடு, ஏற்கனவே 2, 3 துறைகளை கவனிக்கும் எஸ்பிக்களுக்கு வேலைப்பளுவை குறைக்கும் வகையில் 5 எஸ்பி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது. அதுமட்டுமின்றி 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்களுக்கான பதவி உயர்வுகளும் வெகு நாட்களாக வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதையும் உடனடியாக நிறைவேற்ற அரசும், உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். சமீபகாலமாக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சீனியர் எஸ்பிக்கள் அவ்வப்போது ஆய்வுக்கு சென்று பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

கிடப்பில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனுக்குடன் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கேற்ப காவல் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கை இல்லை என்ற மனக்குமுறல் அந்தந்த காவல் நிலையத்தை கவனிக்கும் அதிகாரிகளிடம் இருந்து வெளிப்படுகிறது. வேலைகளை முடுக்கிவிடும் உயர் அதிகாரிகள் அதற்கேற்ப காலி பணியிடங்களை நிரப்புவதிலும் அக்கறை செலுத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

Tags :
× RELATED முதுநிலை மருத்துவப்படிப்பில் அகில...