×

அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்க வேண்டாம்

புதுச்சேரி, நவ. 6: போட்டி அரசாங்கம் நடத்த முயற்சி செய்யக்கூடாது, உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு நீங்கள் செயல்பட வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டசபை கமிட்டி அறையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழக மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கி இருக்கிறார்கள். ஒருபுறம் திருவள்ளுவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டு, மறுபுறம் அவரது படத்திற்கு காவித்துணி போர்த்தி அவமானத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 4 நாட்களுக்கு முன் நானும், அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோரும் காரைக்கால் சென்றோம். அங்கு தனியார் தொண்டு நிறுவனம், தனியார் தொழிற்சாலைகள், அரசு ஊழியர்கள் அமைப்பு, கோயில் நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டோம். அங்கு கலெக்டர் தலைமையில் 177 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் காவிரி நீர் வரும் வாய்க்காலும் தூர்வாரப்பட்டுள்ளது. அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின்பேரில் காரைக்கால் கலெக்டர் தலைமையில் கூட்டுமுயற்சியால் இந்தப்பணிகள் நடைபெற்றுள்ளது.

இதில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழை நானும், கலெக்டரும் கையெழுத்திட்டு வழங்கினோம். அதேபோல் காரைக்கால் டி.ஆர் பட்டினத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தோம். ஆனால் கவர்னர் கிரண்பேடி, காரைக்கால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதில் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனத்தினரை அழைத்து தனது அலுவலகத்தில் விழா நடத்தி அவர்களுக்கு விருது வழங்கியுள்ளார். அரசு சார்பில் ஏற்கனவே அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பிறகு, எந்த அதிகாரத்தில் அவர்களுக்கு மறுபடியும் கவர்னர் விருது வழங்கினார். அன்றாட அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடக்கூடாது என முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் 30-4-2019 அன்று நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. முதல்வர், அமைச்சர்களின் உத்தரவின்படிதான் தலைமை செயலர், செயலர்கள் செயல்பட வேண்டும். கவர்னர் உத்தரவை செயல்படுத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கவர்னருக்கு ஏதாவது கோப்பில் சந்தேகம் இருந்தால், அதை அவர் சம்பந்தப்பட்ட துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த செயலரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் அனுமதி பெற்றுத்தான் கவர்னருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். ஆகையால், அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போட கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், சட்ட விதிமுறைகளை மீறியும், நீதிமன்ற உத்தரவை மீறியும் கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், இது சம்பந்தமாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். போட்டி அரசாங்கம் நடத்த முயற்சி செய்யக்கூடாது, உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு நீங்கள் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும் என அதில் கூறியிருந்தேன். இலவச அரிசி வழங்க அமைச்சரவை முடிவு செய்து கோப்பு அனுப்பினால். பணமாகத்தான் வழங்குவேன் என தடுத்து நிறுத்துகிறார். மக்களை மதிக்காத கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா?. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார்?. கடந்த 3 ஆண்டுகாலமாக இவ்வளவு தடைகளை மீறியும் அரசின் வருமானத்தை பெருக்கி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி வாங்கிய கடனுக்கு ரூ.300 கோடி வட்டியும், அசல் ரூ.500 கோடியும் செலுத்தி வருகிறோம். புதுச்சேரி அரசு 25 சதவீதம் வரை கடன் வாங்கலாம். ரங்கசாமி ஆட்சியில் 24 சதவீதம் கடன் பெறப்பட்டது. ஆனால் நாங்கள் இதுவரை 22 சதவீதம் மட்டுமே கடன் வாங்கி இருக்கிறோம். அதன்படி, கட்டுமான பணி, வளர்ச்சி திட்டங்களுக்காக வெளிச்சந்தையில் ரூ.300 கோடி கடன் பெற கோப்பு அனுப்பி வைத்தோம். அதையும் கவர்னர் நிறுத்தி வைத்திருக்கிறார். நிதி அமைச்சகத்துக்கு கூட கோப்பை அனுப்பி வைக்கவில்லை. கவர்னர் தடுத்தும் 11 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. புகார்கள் வந்தால் அதனை அவர் அரசுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக கவர்னரை ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கூறவில்லை. விதிமுறை, சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட கூறுகிறேன்.

பட்டேல் விழா அரசு விழாவாக நடத்தப்பட்டது. இதில் நான் கலந்து கொண்டு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். சுதந்திர ஓட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆனால் கவர்னர் கிரண்பேடி எனக்கு போட்டியாக கவர்னர் அலுவலகத்தில் 200 மாணவர்களை வைத்து தனியாக ஓட்டம் நடத்தினார். அரசு நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் வகையில் இதனை அவர் செய்துள்ளார். ேஹக் செய்யப்படும் என்பதால் சமூக வலைதளங்களில் அரசின் தகவல்களை, உத்தரவுகளை போடக்கூடாது. ஆனால் மத்திய அரசு, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இனியாவது அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். கவர்னரின் தலையீடு குறித்து மத்திய அரசு, பிரதமர், மத்திய உள்துறை, நிதியமைச்சரிடம் பலமுறை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மத்திய அரசு புதுச்சேரி அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு வரும் 21ம் தேதி வருகிறது. அதிலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Tags : government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்