×

குடிநீர் வழங்கக்கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், நவ. 6: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கடந்த சில மாதங்களாக தவித்து வந்துள்ளனர். இதனால் குடிநீர் இன்றி அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் தெரு மின்விளக்குகள் எதுவும் எரியாமல் கடந்த சில மாதமாக தெரு முழுவதும் இருண்டு கிடந்தது. இதனால் இருள் சூழ்ந்த பகுதிகளை சாதகமாக்கிக்கொண்டு பல சமூகவிரோதிகள் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீட்டைவிட்டு தெருக்களுக்கு வரமுடியாத சூழ்நிலையில் அப்பகுதி பெண்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.

தெரு மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் நகராட்சி உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதியை செய்து தருவதாக உறுதி அளித்ததன்பேரில்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED இலவச வீட்டு மனை பட்டா கோரி உசிலம்பட்டி ஆர்டிஓ ஆபீஸ் முற்றுகை