×

அள்ளூர் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி

சேத்தியாத்தோப்பு, நவ. 6: சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதங்குடி ஊராட்சியை சேர்ந்த அள்ளூர் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி முழுவதும் சேதமடைந்து குடிநீர் கசிந்து வருகின்றது. தொட்டியின் மேல் செடி கொடிகள் முளைத்து தொட்டி சேதமடைந்து வருகின்றது. மேலும் நீர்தேக்க தொட்டியை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமலும், பராமரிக்காமலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தொட்டிக்கு அருகே உள்ள பகுதிகளில் சுகாதாரமாக இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்களும், கப்புகளும் கிடக்கின்றன. அள்ளூர் கிராம கிழக்கு தெருவில் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கின்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நேரடியாக ஆய்வு செய்து வடிகால் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஊராட்சி செயலாளர் வெளியூரில் வசிப்பதால் எங்கள் கிராமத்தை சரியாக கவனிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர். தெருக்களுக்கு செல்லும் குடிநீர் பைப் லைன்கள் கழிவுநீரில் மேல் செல்கின்றது. இதுகுறித்து பலமுறை கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து எங்கள் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Allur ,village ,
× RELATED உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 17 பேருக்கு கொரோனா