×

சிறு பழ வியாபாரிகள் விவகாரம் நகராட்சி ஆணையரிடம் பொதுநல அமைப்பினர் கடும் வாக்குவாதம்

கடலூர், நவ. 6: கடலூர் பெருநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழியின்படி 55 சிறு பழ நடைபாதை வியாபாரிகளுக்கு, கடலூர் பேருந்து நிலையத்தில் இடம் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கடலூரின் புதிய நகராட்சி ஆணையருக்கும், பொதுநல அமைப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடலூர் பெரு நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தின் உட்புறம் கடந்த 50 வருடங்களாக சிறு வணிகம் செய்து வந்த சிறு பழ வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ஏதுவாக தங்களின் இடத்தை காலி செய்து ஒத்துழைப்பு அளித்தனர். வணிக வளாகம் கட்டி முடித்த பிறகு சிறு பழ வியாபாரிகள் 55 பேருக்கும், ஏற்கனவே அவர்கள் கடையை நடத்திய இடங்களை திருப்பி அளிப்பதாக அப்போது கடலூர் நகராட்சி நிர்வாகம் உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் ஆகியும் தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் கூட நகராட்சி நிர்வாகம் அதனை செயல்படுத்த வில்லை.இதற்கிடையே பேருந்து நிலையத்துக்குள் அரசியல் செல்வாக்கு படைத்த தனிநபர்கள் தன்னிச்சையாக தங்களுக்கு வேண்டியவர்களை கடை நடத்த அனுமதித்து மாமூல் பெற்று வருகின்றனர். இது நன்கு தெரிந்திருந்தும் கூட நகராட்சி அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான 55 சிறு பழ வியாபாரிகளுக்கு ஆதரவாக கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதியும், அக்டோபர் மாதம் 31ம் தேதியும் அவர்கள் கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சிறு பழ வியாபாரிகள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இப்போராட்டங்கள் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஒரு மாதத்துக்குள் கடலூர் பேருந்து நிலையத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடலூர் பெருநகராட்சி புதிய ஆணையராக ராமமூர்த்தி பொறுப்பேற்றார். அவரை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக, கடலூர் அனைத்து பொதுநல இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலர் திருமார்பன், மாநில நிர்வாகி திருமாறன், மீனவர் பேரவை சுப்புராயன், மாநில துணைத்தலைவர் கஜேந்திரன், தனியார் பேருந்து ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கம் குரு ராமலிங்கம், தமிழர் கழகம் பரிதிவீரன், சமூக நீதி பாசறை சாய்ராம் மற்றும் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சுகுமாரன் ஆகியோர் ஆணையர் ராமமூர்த்தியை நேரில் சந்தித்து பேசினர். பிரச்னை முழுவதும் தெரிந்து கொண்டு பேசுவதாக கூறிய ஆணையர், பேருந்து நிலையத்தில் இடம் கேட்க உரிமையில்லை என்றார்.

ஆணையரின் பதிலை கேட்டதும், அதிர்ச்சியடைந்த பொதுநல அமைப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழியின்படி 55 சிறு பழ வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும், என்று கோரினர். இதையடுத்து 2 தினங்களுக்குள் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார். கடலூர் பெருநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 8ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது