×

இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி 3 பேர் அதிரடி கைது

கடலூர், நவ. 6: கடலூர் அருகே ரெட்டிச்சாவடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 3 பேரை டெல்டா போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கடலூர் அருகே ரெட்டிசாவடியில் கடந்த 21.5.2016 அன்று ரமேஷ் மகன்கள் வினோத்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கு தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் லக்ட்சுமணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவான நிலையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி  அபிநவ் உத்தரவின்பேரில் டெல்டா சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனி போலீஸ் படை இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு வேப்பூர் வாரச்சந்தையில் கோழி வியாபாரத்திற்காக வந்திருந்த இரட்டை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான லட்சுமணனை டெல்டா போலீஸ் படையினர் மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்தனர். இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி லட்சுமணன் பிடிபட்ட நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செங்கல் சூளை தொழிலாளர்கள்போல் அப்பகுதியில் சென்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (28), கீழ் அழிஞ்சிபட்டை சேர்ந்த டேவிட் ராஜ் (26), சதீஷ் (25) ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரும் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...