×

5 ஆயிரம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நிபந்தனை

கடலூர், நவ. 6: கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது மற்றும் பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்பவர்களுடன் மாவட்ட  ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்திலுள்ள மூடப்படாத அனைத்து ஆழ்துளை கிணறுகளை விரைந்து மூட வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் ரூ.15 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையுடன் படிவம் விண்ணப்பித்து பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்  தனிநபர் கிராம ஊராட்சிகள் அலுவலர்களிடம் ரூ.5 ஆயிரத்திற்கு பணம் செலுத்தி அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலாளர்களை தனிநபர் அணுகும்போது ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான சான்று அத்தனிநபர் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்த பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும்.

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சிறு கற்கள் கொண்டு தரைமட்ட அளவிற்கு சமமாக மூடவேண்டும். இது அந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்ட பணியாளர்களின் பொறுப்பாகும். ஆழ்துளை கிணறு அருகில் அவற்றின் ஆழம், மண்ணின் தன்மை போன்ற விவரங்களை விளம்பர பலகையாக வைக்க வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறுகள் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திட வேண்டும். மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி முறையான சான்று பெற்று நடைபெறுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி விரைந்து முடித்திட வேண்டும். மேலும் தனிநபர் ஆழ்துளை கிணறுகள் ஏதும் மூடப்படாமல் இருந்து அதனை அவர்கள் மூட மறுத்தால் உள்ளாட்சி நிர்வாகம் தனது பொறுப்பில் அதனை மூட வேண்டும். அதற்கான செலவினத்தை தனிநபரிடமிருந்து வசூல் செய்திட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்