அகஸ்தீஸ்வரம் அருகே கால்வாய் உடைப்பு வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளம்

தென்தாமரைகுளம்,நவ.6: அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழசந்தையடியில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரியில் கனமழை பெய்தது. அப்போது அருகில் உள்ள கவர்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் சந்தையடி, கொட்டாரம் பகுதி வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசன கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ரயில்வே கேட் அருகே பணிகள் நடந்துவரும்  இடத்தில் திடீர்  உடைப்பு  ஏற்பட்டது. தொடர்ந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 12 க்கும்  மேற்பட்ட வீடுகளுக்குள் இந்த மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும்  அவதிக்குள்ளாகினர்.

இதேபோல் வீடுகளுக்குள் இருந்த பொருட்களும்  நாசமாகின. இதையடுத்து வீடுகளில் இருந்து வெளியேறிய பொது மக்கள் உறவினர்  வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் ஓரளவு  வடிந்து விட்டதாக தெரிகிறது. அதே வேளையில் குடியிருப்பு பகுதியை  முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி  குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சொந்த வீட்டுக்கு சென்று  வருவதில் பிரச்னை தொடர்கிறது. ஆகவே உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்  அங்கிருந்து வெளியேறி, மீண்டும் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாத நிலை  உள்ளது. மழை ஓய்ந்து 4 நாள் ஆகியும் இதே நிலை நீடிக்கிறது.  தொடர்ந்து பொது மக்கள், நிலைமையை அதிகாரிகளிடம் எடுத்துக்  கூறி மழை நீரை வெளியேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில்  வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று சமூக  ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>