×

தீபாவளி பண்டிகைக்கு பின் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் மீண்டும் துவக்கம்

சிவகாசி, நவ. 6:    தீபாவளி பண்டிகைக்கு  இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும்  அதிகளவில் பட்டாசுகள் விற்பனை ஆனதால் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி பணியை உரிமையாளர்கள் துவக்கியுள்ளனர். சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுள் இந்தியா முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.    இந்த ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், 3 லட்சம்  தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.  வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒருசில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆர்டாின் பேரில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவர். பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்ததால் வடமாநில வியாபாரிகள் கடந்த  ஆண்டு  ஆப்சீசன் ஆர்டர்களை வழங்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக  பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு கடும் தட்டுப்பாடு நிலவியது.பட்டாசுகள் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சிறிய, நடுத்தர ஆலைகளும் பட்டாசு விலையை பல மடங்கு உயர்த்தினர்.

இருப்பினும் கடந்த ஆண்டு சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்துள்ளது. இதனால் தற்போதே அடுத்த தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்களை வடமாநில வியாபாரிகள் கொடுக்க துவங்கியுள்ளனர். இதன் காரணமாக பெரிய, பெரிய பட்டாசு ஆலைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆலைகளில் சிறப்பு பூஜைகள்  செய்து உற்பத்தி பணியை துவக்கியுள்ளனர். இதேபோல் நடுத்தர, மற்றும் சிறிய ஆலைகளிலும் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்க பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் தேவைக்கு ஏற்ப பட்டாசுகள் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு 4 மாத காலம் உற்பத்தி பணிகள் நடைபெறாததால் பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து ஆலைகளிலும் பட்டாசுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது. எனவே தற்போது அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்களை வடமாநில வியாபாரிகள் தற்போதே வழங்க துவங்கியுள்ளனர். இதனால் பட்டாசு ஆலைகளில் பூஜைகள் நடத்தப்பட்டு உற்பத்தி பணிகளை துவக்கியுள்ளோம்.  பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் பணிக்கு திரும்பியுள்ளனர்’ என்றார்.

Tags : Re-opening ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...