×

அருப்புக்கோட்டை, திருச்சுழியில் இடிந்து விழும் நிலையில் ‘108’ஊழியர்களின் ஓய்வறை

அருப்புக்கோட்டை, நவ.6:  அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் 108 ஆம்பிலன்ஸ் ஊழியர்கள் தங்கி ஓய்வு எடுக்க ஒதுக்கப்பட்ட அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். அருப்புக்கோட்டை  திருச்சுழி, அரசு மருத்துவமனைகளிலும், பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.  இந்த ஆம்புலன்ஸில் ஒரு டிரைவர் மற்றும் டெக்னிசீயன் உள்ளனர்.  இந்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை மதுரைக்கு கொண்டு செல்வதற்கும், விபத்து காயம் ஏற்பட்டவர்கள், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நோயாளிகளை ஆம்புலன்ஸ் கொண்டுவந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். அவசர சிகிச்சைக்கு நோயாளிகள் இல்லாத நேரங்களில் ஓய்வு எடுப்பதற்காக  இவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கியுள்ளனர்.  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒதுக்கியுள்ள அறை பழைய சமையல் அறைக்கூடம்.  இது எப்போதும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.  கழிப்பறை வசதி கிடையாது.  இதனால் இங்கு தங்கியுள்ள டிரைவர் மற்றும் டெக்னிசியன் மிகவும் சிரமப்படுகின்றனர்.  மேலும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  செவிலியர் தங்கியிருந்த  அறை ஒதுக்கப்பட்டுள்ளது.  இது 30 வருடத்திற்கு மேல் கட்டப்பட்டது.  இது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பாழடைந்த கட்டிடமாக உள்ளது.  மேலும் மருத்துவ பொருட்களை இந்த கட்டிடத்தில் தான் வைக்க வேண்டி உள்ளது.  

மழை பெய்தால் கட்டிடம் முழுவதும் தண்ணீர் ஒழுகுகிறது.  இதனால் மருத்துவ பொருட்கள் சேதமடைகிறது.  மேலும் ஓய்வு எடுக்கக்கூடிய ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.  ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பாம்புகள் படையெடுக்கிறது.  இதனால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தினலேயே ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.   பெண் ஊழியர் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதேநிலை தான் திருச்சுழி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையும் பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இங்கும் பாம்புகள் படையெடுக்கிறது.  கழிப்பறை வசதியும் இல்லை.  மேலும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் 2 வீடுகள் காலியாக உள்ளது.  இதை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒதுக்கக்கோரி பலமுறை மருத்துவமனை அதிகாரியிடமும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடமும் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.  எனவே காலியாக உள்ள வீட்டை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் அருப்புக்கோட்டை, திருச்சுழி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், மருத்துவ பொருட்களை வைப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் நல்ல நிலைமையில் உள்ள கட்டிடத்தை ஒதுக்கி தரவேண்டும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Workmen ,Tiruchuzhi ,Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...