×

சடையநேரி கால்வாயில் உபரிநீர் திறக்க நடவடிக்கை

தூத்துக்குடி, நவ. 6: சடையநேரி  கால்வாயில் உபரிநீர் திறந்து விட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் அனிதா  ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாபநாசம்  அணையில் தற்போதைய நிலவரப்படி 133 அடி தண்ணீர் உள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் விவசாயத்துக்காக மருதூர் அணை மேலக்கால், கீழக்கால் மூலம் 31  குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல் வைகுண்டம் அணை வடகால்,  தென்கால் மூலம் 22 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இக்குளங்கள் நிரம்புவதற்கு ஏற்ற வகையில் மிகவும் சரியான திட்டமிடல் செய்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

 தற்போது  வைகுண்டம் அணையில் இருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உபரி நீர் கடலில் வீணாக கலக்கும் நிலையை தடுத்து  சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். சடையனேரி கால்வாயில்  500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்படும் நீர்  தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியங்களில் உள்ள  வறண்ட பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு சடையநேரி கால்வாயில்  திறக்கப்படும் நீர் எழுவரைமுக்கி, நகனைகுளம், வளுக்குகுளம், படுகை,  நங்கைமொழி வழியாக ராமசுப்பிரமணியபுரம் நீர்தேக்கத்தில் சேரும். அங்கிருந்து  இரு மடைகள் மூலம் 176 கனஅடி தண்ணீர் சடையநேரி குளத்துக்கு கிடைத்திட  வகை செய்ய வேண்டும்.

 4 மடைகள் மூலம் 324 கன அடி நீர் முதலூர் ஊராணி,  பொத்தகாலன்விளை, வைரவன் தருவை வழியாக புத்தன்தருவை குளத்துக்கு சென்றடைய  வேண்டும். இதில் சுப்புராயபுரம் நீர் தேக்கதில் இருந்து 22 கனஅடிநீர்  உடன்குடி ஒன்றியம் பல்லாநேரி, புல்லாநேரி, தாங்கைகுளம் ஆகிய குளங்களுக்கு  வழங்க வேண்டும்.
 இவ்வாறு அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Sadamaneri Canal ,
× RELATED கரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க...