×

உடன்குடியில் தூய்மை பணி

உடன்குடி,நவ.6: உடன்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பை, தேங்கிநின்ற மழைநீரை அகற்றும் தூய்மை பணி நடந்தது. உடன்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. அத்துடன் மழையால் பெருக்கெடுத்த தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கிநின்றது. இதனால் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜிடம் புகார் தெரிவித்தனர்.

 இதையடுத்து பாதிப்புக்குள்ளான  பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட அவர், 1 முதல் 5 வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 5 வார்டுகளிலும் குப்பைகள் கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும் தேங்கிநின்ற மழைநீரை அருகேயுள்ள பாழடைந்த கிணறுகளில் செல்லும் வகையில் அமைப்பு ஏற்படுத்தி சீரமைத்தனர். பின்னர் இதுகுறித்து செயல் அலுவலர் மாணிக்கராஜ் கூறுகையில், ‘‘உடன்குடி  பகுதியில் குப்பைகள் உடனுக்குடன்  அகற்றப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகள், தெருக்களின் குறைபாடுகளை எந்நேரமும் தெரிவிக்கலாம். பேரூராட்சியில் தெரிவித்தால் உடனடியாக குறைகள் களையப்படும். நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு