×

கம்பம் பள்ளதாக்கில் காய்ச்சல் தீவிரம்

உத்தமபாளையம், நவ. 6: பருவநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதனை தடுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முன்னாள் அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. சீதோஷ்னநிலையில் திடீரென மாற்றம் உண்டாவதும், பின்பு மழை பெய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மறுபுறம் பகல் நேரத்தில் வெப்பம் கொளுத்துவதும், பின்பு மழை பெய்வதுமாக தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றம் தெரிகிறது. இதனால் கொசுக்கள் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் கடிக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என கடந்த 1 வாரமாகவே அதிகளவில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி என வருபவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் களம் இறங்கி உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் தடுக்கமுடியும். பாக்ஸ் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரும், குழந்தைகள் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பழனிசாமி கூறுகையில், ‘தொடர்மழை, கடும் வெயில் என இல்லாமல் இரண்டுமே மாறிமாறி இருப்பதால் சீதோஷ்ன நிலையில் மாற்றங்கள் உண்டாகி உள்ளது. குறிப்பாக பெரியாற்று தண்ணீரில் வெள்ளநீர் கலப்பதால் குடிக்கின்ற தண்ணீரின் இயல்பில் மாற்றங்கள் உண்டாகின்றன. குளோரினேசன்கள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் தண்ணீரை அப்படியே குடிப்பதால் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. இதனால் இயல்பிலேயே உடல்நிலையில் வேறுபாடுகள் உண்டாகும். எனவே காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் இதனை தடுத்திட பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பின்பு ஆறவைத்து குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பதட்டப்படாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சைகள் எடுத்துகொள்ளலாம்’ என்றார்.

Tags : Pole Valley ,
× RELATED கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்...