×

மூணாறு முக்கிய சுற்றுலாத்தலத்தில் குப்பை குவியல்

மூணாறு, நவ. 6: மூணாறில் முக்கிய சுற்றுலா தலங்களான பொன்முடி, எக்கோபாயிண்ட், தூக்குப்பாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக குப்பைகள் மற்றும் கழிவுகள் முக்கிய சாலைகளில் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறில் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படுவது பொன்முடி, மாட்டுப்பட்டி, தூக்குப்பாலம், எக்கோபாயிண்ட் போன்ற பகுதிகள் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் மூலம் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் முக்கிய சாலைகளில் குவிய துவங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் விவசாய தொழில் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே தற்பொழுது இடுக்கி மாவட்டம் நம்பி உள்ளது. இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு குறிப்பிட்ட இடங்கள் இல்லாத காரணத்தால் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயன்படுத்திய பாட்டில்கள், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை முக்கிய சாலைகளில் கொட்டுவதால் சாலைகளில் குப்பைகள் குவிந்த வண்ணம் காணப்படுகிறது.

மேலும் வனப்பகுதிகளாக கருதப்படும் பொன்முடி, எக்கோபாயிண்ட், தூக்குப்பாலம் போன்ற பகுதிகளில் அதிகளவு குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. வனத்துறை சார்பாக குப்பைகள் கொட்டாதீர்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருந்த போதிலும் குப்பைகளை கொட்டுவதற்கான இடங்களை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல விதமான நோய்கள் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவதால் வன உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது எனவே இந்த நிலையை பஞ்சாயத்து அதிகாரிகள் கருத்தில் கொண்டு குப்பைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் கே.என் ராஜூ கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் தவிர இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள், மேலும் பொதுமக்கள் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி முக்கிய சாலைகளில் கொட்டுவதாகவும் பஞ்சாயத்து அதிகாரிகள் முன்கை எடுத்து இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன்முடி, தூக்குப்பாலம், எக்கோ பாயிண்ட் போன்ற பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்த வேண்டும்’ என்றார்.

Tags : tourist spot ,Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...