×

குடிமராமத்து பணியில் தாதமுத்தன் கண்மாயில் ரூ.40 லட்சம் சுருட்டல்

சின்னமனூர், நவ. 6: சின்னமனூர் ஓடைப்பட்டி பகுதியிலுள்ள தாதமுத்தன் குளம் கண்மாயில் மராமத்துப்பணியில் கரையில் மண்ணை சுரண்டி அள்ளி போட்டு ரூ.40 லட்சம் மோசடி நடந்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னமனூர் ஓடைப்பட்டி பேரூராட்சியில் வாழை, திராட்சை, தென்னை, காய் கறிகள் என நிலத்தடி நீர் பாசனத்தில் தொடர் விவசாயம் நடந்து வருகிறது. இங்குள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியில் 70 ஏக்கர் அளவில் உள்ள தாதமுத்தன் குளம் மிகவும் பழமை வாய்ந்த பெரிய கண்மாயாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உருண்டு வரும் வெள்ளமும், ராயப்பன்பட்டி சண்முகா நதி அணையில் திறக்கப்படும் தண்ணீரும் நிரம்பிடும். தொடர்ந்து 6 மாதம் தேங்குவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதியும் குடிநீர் வசதிக்கும் துணையாய் நின்று பயன்படுகிறது. இந்த தாதமுத்தன் குளம் கண்மாய் உத்தமபாளையம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கண்மாயை தூர் வாரியும், பலவீனமான கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். அதன்படி மேற்படி முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20ம் வருடத்தில் ரூ.40 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய அரசு உத்தரவிட்டது.

அதன்படி அப்பணிகளை பொதுப் பணித்து றையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சென்று மண்ணை சுரண்டி நீண்ட கரை மேல் போட்டு உயர்த்தி வேலை செய்ததாக காட்டி, குளத்திற்குள் தூர்வாராமல் அறை குறை பணியாக கண் துடைப்பாக நடத்தி நிறைவு செய்துவிட்டனர். மற்ற மூன்று பகுதிகளில் கண்மாய் கரைகள் சிதிலமடைந்து கிடப்பதையும் காண முடிகிறது. இதனால் ரூ.40 லட்சத்தில் வேலை செய்தது போல காட்டி பணத்தை சுருட்டி சுவாஹா செய்து விட்டனர். இதைக் கண்ட விவசாயிகள் இந்த அறை குறையான ஏமாற்றும் வேலையை செய்யாமலேயே இருந்திருக்கலாம் என கவலை அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குளத்தின் பரப்பளவை குறைக்கும் விதத்தில் ஆக்கிரப்பு செய்து தோட்டங்களாகவும் மாறி யிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்மாயை ஆய்வு செய்து மறுபடியும் உண்மையான பணி மேற்கொண்டு விவசாயம் தொடரவும் விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘தாத முத்தன் கண்மாய் குடி மராமத்து பணியில் முறைகேடு நடந்துள்ளது. கரையில் மண்ணை அள்ளிப்போட்டு வேலை செய்ததாக கணக்கு காட்டி முடித்து விட்டனர். தண்ணீர் தேங்கும் பரப்பளவில் ஆக்கிரமிப்பும் இருப்பதால் சிக்கல் நீடித்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக குளத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Dadamuttan Kannamai ,
× RELATED குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்