×

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

பரமக்குடி, நவ.6: பரமக்குடியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் அரசு, தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள் என அதிகளவில் உள்ளதால் தினசரி ஏராளமான மக்கள் பரமக்குடி வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதமாக பரமக்குடியில் பெய்த தொடர் மழையால் சுப்பிரமணியன் தெரு, குத்துக்கால் தெரு, முசாபர் கனி தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. தெருக்களில் கழிவுநீர் கலந்து கிடப்பதால் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை பரவுகிறது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் முத்தாலம்மன் கோவில் தெருவினை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளனர், காவிரி கூட்டு குடிநீரில் உப்பு தண்ணீர் கலந்து வருவதால், நோய்கள் தாக்குகின்றன. பரமக்குடியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை, நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பரமக்குடி ஆயிர வைசிய சமூக நலச்சங்கம் நிர்வாகிகள் கவுன்சிலர் ஜெகநாதன்,சுப்பிரமணியன், ராமநாதன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, சமூக சேவகர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிர்வாகத்திற்கு எதிராக கேஷமிட்டனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த. சாந்தி, கவிதாமணி,கவிதா, சகுந்தலா, கௌரி, சங்கீதா மீனா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தினால் பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : siege ,municipalities ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள்...