×

பொசுக்குடி காலனியில் குடிநீர், மயானம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை

சாயல்குடி, நவ. 6: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி காலனி கிராமத்திற்கு மயானம், குடிநீர், தெருவிளக்கு, தெருச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியம், பொசுக்குடி ஊராட்சியில் உள்ள பொசுக்குடி காலனியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் வசதி, கழிவு, மழைநீர் கால்வாய், தரமான கழிவறைகள், தெருச் சாலை வசதிகள் கிடையாது. இரவில் தெருவிளக்கு எரிவது கிடையாது. பொது மயானத்தை ஆக்கிரமித்துள்ளதால் இறப்பு ஏற்பட்டால் புதைக்க மயானம் இன்றி வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொசுக்குடி காலனி பொதுமக்கள் கூறும்போது,  காலனி கிராம மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்றும்,  அருகில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் கட்டப்பட்டது. தரமின்றி கட்டப்பட்ட, சேதமடைந்த தரைமட்ட தொட்டியுடன் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் காவிரி குடிதண்ணீர் வராததால்  இத்தொட்டி காட்சி பொருளாக உள்ளது. தொட்டியிலிருந்து வழங்கப்பட்ட குழாய்கள் உடைந்து கிடக்கிறது. இதனால் பஞ்சாயத்து நிர்வாகம் உப்பு தண்ணீரை வழங்கி வருகிறது. அதனை குடிப்பதற்கு தவிர்த்து மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம்.

தெருக்களில் போடப்பட்ட பழைய சிமென்ட் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமான கிடக்கிறது. இதனால் தற்போது பெய்த மழைக்கு தண்ணீர் பெருகி ஓட வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு வழிந்தோடியது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாலும், உப்பு தண்ணீர் பிடிக்கும் இடத்தை சுற்றி கழிவுநீராக மாறி தேங்கி கிடப்பதாலும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. இதனால் குழந்தை முதல் முதியவர்கள் வரை காய்ச்சல்,சளி போன்ற தொற்று நோய்கள் பாதித்து வருகிறது. இங்கு கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட காலனி வீடுகள் இடிந்து கிடக்கிறது. ஒரு சில வீடுகளில் மேற்கூரையாக கிடுகை வேய்ந்து வீடாக பயன்படுத்தி வருகிறோம். வீடுகளில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறை தரமற்று கட்டப்பட்டதால் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

கிராமத்திற்கு எதிர்புறம் உள்ள மயானத்தை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். இதனால் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் கூட புதைக்க இடம் இல்லை. இருக்கும் கொஞ்சம் இடமும் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாததால், கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது என புகார் கூறுகின்றனர். இப்பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்களுக்கும், கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமிலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Poskudy ,
× RELATED பொசுக்குடி காலனியில் குடிநீர், மயானம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை