×

சோழவந்தான் அருகே ‘பார்’ ஆனது பயணிகள் நிழற்குடை

சோழவந்தான், நவ. 6: சோழவந்தான் அருகே, பயணிகள் நிழற்குடையை குடிமகன்கள் பார் ஆக பயன்படுத்தி, இருக்கைகளை உடைத்து அட்டகாசம் செய்கின்றனர். அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் நிழற்குடையில் நிற்க அச்சமடைகின்றனர். சோழவந்தான் அருகே, மேலக்காலில் நாகமலை கணவாய் அருகே, அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன. மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகே சோழவந்தான்-திருமங்கலம் சாலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதில், சிமெண்ட் சிலாப்பிலான இருக்கைகள் அமைக்கப்பட்டன. சோழவந்தான், செக்கானூரணி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும், அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், பயணிகள் நிழற்குடையை குடிமகன்களை ‘பார்’ ஆக பயன்படுத்தி வருகின்றனர். மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை உடைப்பதுடன், போதையில் சிமெண்ட் சிலாப் இருக்கைகளையும் உடைத்துவிட்டனர். இதனால் மாணவ, மாணவியர் நிழற்குடையில் நிற்க அச்சப்பட்டு, வெளியில் நிற்கின்றனர். வெயில், மழை காலங்களில் அவதிப்படுகின்றனர். மலைப்பகுதியான இப்பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால், மழை, வெயிலுக்கு ஒதுங்க இடமில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடையை மராமத்து செய்து, போலீசார் மூலம் குடிமகன்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியரும், அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bar ,Cholavandan ,traveler ,
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்