×

மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மோதப்போவது யார் சீட் பிடிக்க முக்கிய கட்சியினர் போட்டாபோட்டி

மதுரை, நவ. 6: மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் சீட் பிடிக்க முக்கிய கட்சியினர் போட்டாபோட்டி போடுகின்றனர். இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால், தேர்தல் அறிவிப்புக்கு முன் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் எத்தனை பேர்: மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 80 ஆயிரத்து 870 பேர், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 874 பேர், இதர வாக்காளர்கள் (திருநங்கைகள்) 110 பேர் உள்ளனர். மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில், மொத்த வாக்காளர்கள் 12,87,508 பேர். ஆண்கள் 6,35,548 பேர், பெண்கள் 6,51,879 பேர், இதர வாக்காளர்கள் 81 பேர் உள்ளனர்.  

3 நகராட்சிகள்: திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் 45,438 வாக்காளர்கள் உள்ளனர். உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 29,524 வாக்காளர்களும், மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 34,271 வாக்காளர்களும் உள்ளனர்.

9 பேரூராட்சிகள்: மாவட்டத்தில் மொத்தம் 9 பேரூராட்சிகள் உள்ளன. இதில், எழுமலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 14,003 வாக்காளர்ளும், அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 6,698 வாக்காளர்களும், பரவை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 17,593 வாக்காளர்களும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9,473 வாக்காளர்களும், பாலமேடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7,793 வாக்காளர்களும் உள்ளனர். மேலும், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 18,665 வாக்காளர்களும், வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 21,095 வாக்காளர்களும், பேரையூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9,174 வாக்காளர்களும், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8,102 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் கட்சி சின்னம் ஒதுக்கப்படுகிறது. இது தவிர மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில், தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். இந்நிலையில் மேயர், மாநகராட்சி வார்டு மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு சீட் பிடிக்க முக்கிய அரசியல் கட்சியினர் போட்டாபோட்டி போடுகின்றனர். வார்டுகளில் தனிப்பட்ட செல்வாக்கு படைத்தவர்கள் அரசியல் கட்சியில் சார்பில் போட்டியிட சீட் கிடைக்காவிட்டால், தனித்து போட்டியிடவும் தயாராகி வருகின்றனர்.  வார்டுகளில் அப்பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மாவட்டம் முழுவதும் 420 ஊராட்சிகள் உள்ளன. இதில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் சின்னம் கிடையாது. ஊராட்சி தேர்தலில் மட்டும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் யார்? யார்? போட்டியிட போகிறார்கள்? என்ற பரபரப்பு தீபாவளிக்கு பிறகு தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரி, ஊழியர்கள் இடம் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் தேர்தலுக்கு முன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : parties ,election ,Madurai district ,
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...