×

குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்தால் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் விநியோகம்

திண்டுக்கல், நவ. 6: குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்தால் ஒரு மணிநேரம் கழித்து பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசுப்புழு ஒழிப்பு, குப்பைகளை அகற்றுதல் குறித்து ஊராட்சி அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது, ‘திண்டுக்கல் கிராம ஊராட்சி செயலர்கள், தங்கள் பகுதிகளில்உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் காய்ச்சல் பாதித்தவர்கள், வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் தொற்று நோய் உள்ளவர்களின் விபரங்களை அறிந்து உடனடியாக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, கொசுப்புழு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். இப்பணியினை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும், தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு வீடுகளின் உட்பகுதியிலும், வெளிப்பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட பகுதிகளில் தங்கள் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்களை அனுப்பி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் தினந்தோறும் சேரும் குப்பைகள் (நெகிழிப்பொருட்கள், பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் மற்றும் பல) காலமுறை இடைவேளையில் அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளில் எந்த சூழ்நிலையிலும் மழைநீர் தேங்காத வண்ணம் தடுத்திட வேண்டும். வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்காத வண்ணம் அனுதினமும் பராமரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு- தனியார் கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் சுகாதாரத்துறையினர் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கழுவி, சுத்தம் செய்து, அதுகுறித்த விபரங்களை அறிவிப்பு பலகையில் குறித்திட வேண்டும். 1,000 லிட்டர் குடிநீருக்கு 4 கிராம் அளவில் 33 மூ தரமான குளோரின் உள்ள பிளீச்சிங் பவுடரை வாளியில் எடுத்து கொண்டு, கட்டி இல்லாமல் சிறிதுசிறிதாக தண்ணீர் ஊற்றி பசைபோல் ஆக்கி முக்கால் வாளி அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நன்கு கலக்கி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு சுண்ணாம்பு முதலானவை வாளியின் அடிப்பாகத்தில் தங்கிய பின்பு தெளிந்த குளோரின் நீரினை மற்றொரு வாளியில் ஊற்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்க வேண்டும். குளோரின் கலந்த பின்பு ஒரு மணிநேரம் கழித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறக்க வேண்டும். குளோரின் அளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2 பிபிசி ஆகவும், தெருக்குழாய்களில் குறைந்தது 0.5 பிபிஎம் ஆகவும் இருக்க வேண்டும். இதுகுறித்த விபரங்களை பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும்.

கிணறு, டேங்கர் வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் தண்ணீரிலும் குளோரின் கலந்து (1,000 லிட்டருக்கு 20 மில்லி குளோரின் கலவை) விநியோகிக்க வேண்டும். இதனை களப்பணியாளர்கள் முறையாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், வாளி, குளோரோஸ்கோப், கயிறு போன்றவற்றை ஊராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடிநீர் விநியோகிக்கப்படும் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றில் உடைப்போ, பழுதோ இருக்கும்பட்சத்தில் தண்ணீர் வீணாவதுடன், கொசுப்புழு உற்பத்தியாகி நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களை முன்னிட்டு பஞ்சாயத்து சிறப்பு அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு பொதுசுகாதாரம், நோய்த்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு