×

குஜிலியம்பாறை அருகே குடிசை வீடு தீ விபத்தில் இதுவரை நிவாரணம் இல்லை

குஜிலியம்பாறை, நவ. 6: குஜிலியம்பாறை அருகே பில்லாக்காபட்டியில் குடிசை வீடு தீ விபத்தில் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். குஜிலியம்பாறை தாலுகா, ஆர். கோம்பை அருகே பில்லாக்காபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (55). கூலித்தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை தகர சீட்டினாலும், பக்கவாட்டில் பனை ஓலையிலான குடிசை வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆக.19ம் தேதி வீட்டில் இருந்த விறகு அடுப்பு மூலம் தீ பரவி, பனை ஓலையில் பற்றியதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, கட்டில், பாத்திரங்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும், ஆடு விற்பனை செய்தும், 100 நாள் வேலை கூலி சேமிப்பு என ரூ.25 ஆயிரமும் எரிந்து போனது. தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர் எரிந்த வீட்டை பார்வையிட்டு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் 2 மாதத்திற்கு மேலாகியும் நிவாரண தொகை வரவில்லை.

இதுகுறித்து சுந்தரம் மகன் ராமராஜன் (30) கூறுகையில், ‘கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், எங்களின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்து 15 நாட்கள் கழித்து வருவாய்த்துறை சார்பில், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலை மட்டும் வழங்கி சென்றனர்.
பின்னர் நிவாரண தொகை வழங்குவதற்காக வங்கி சேமிப்பு புத்தகம், ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகலை பெற்றுச சென்றனர். ஆனால் இதுநாள் வரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறையிடம் கேட்டால் வரும் எனக்கூறியே தட்டிக்கழிக்கின்றனர். எனவே வயதான எனது அம்மா, அப்பாவிற்கு நிவாரண தொகை கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Kujiliyampara ,cottage house fire ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சஸ்பெண்ட