×

கொடைக்கானலில் சீலை அகற்றி இயங்கிய தங்கும் விடுதிக்கு மீண்டும் சீல்

கொடைக்கானல், நவ. 6: கொடைக்கானலில் சீலை அகற்றி சட்டவிரோதமாக இயங்கி தங்கும் விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்ததுடன், உதவிய ஓட்டலின் மின் மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். கொடைக்கானல் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட சுமார் 300 தங்கும் விடுதிகள் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த விடுதிகள் சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படுவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் கொடைக்கானல் ஏழு ரோடு சாலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தனியார் தங்கும் விடுதியை அதன் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமலும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாகவும் மீண்டும் திறந்து நடத்தி வந்துள்ளனர். மேலும் இதற்கு அருகிலுள்ள உணவு விடுதியில் இருந்து மின் இணைப்பு பெற்றதும் குறித்து பலர் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அதன் சீல் உடைக்கப்பட்டும், அருகிலிருந்த வழி மூலம் அந்த விடுதி இயக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். மேலும் மின்இணைப்பு பெறப்பட்ட உணவு விடுதியின் மின் மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதியினை உரிமையாளர் திறந்து நடத்தியுள்ளார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து அந்த தங்கும் விடுதி மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்திலும் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்து அந்த தங்கும் விடுதியினை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல யாரேனும் சட்டவிரோதமாக பூட்டிய சீலை அகற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்