×

மனுதர்மம்-மனிததர்மம் இடையே போராட்டம் பெரியார் எங்கும், எப்போதும் தேவைப்படுவார்

திருச்சி, நவ.6: திராவிடர் தொழிலாளர் அணி சார்பில், அமெரிக்காவில் தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதற்கான பாராட்டு விழா, ‘அமெரிக்காவில் பெரியார்’ எனும் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று மாலை நடந்தது.மாநகர தலைவர் மருதை வரவேற்றார். ‘அமெரிக்காவில் பெரியார்’ என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் வெளியிட தொழிலதிபர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.தி.க தலைவர் கி.வீரமணி ஏற்புரை ஆற்றி பேசியதாவது: ஒரு விஞ்ஞானி ஒரு ஊரில் பிறந்தாலும், அவர் கண்டுபிடிப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தாலும் அது உலகளவில் பயன்படுகிறது. அதேபோல தான் பெரியார் உலக மக்களுக்கானவர். பெரியார் சமூக விஞ்ஞானம். அது உலகின் அனைத்து மக்களுக்கும் தேவை. பெரியார் எப்போதும் தேவைப்படுவார். நம் நாட்டில்தான் ஜாதி பாகுபாடு என்றால், அமெரிக்காவிலும் துளிர்விடத்துவங்கி உள்ளது.

அமெரிக்காவில் கருப்பர், வெள்ளையர் பிரச்னை உள்ளது. ஆனால், அமெரிக்காவில் கருப்பர்களை படிக்காதே என சொல்லவில்லை. தனியா படி என்றான். இங்கு படிக்கவே கூடாது என்கிறது மனுதர்மம். இதை எதிர்த்து பெரியார் போராடினார். மக்களிடையே மனப்புரட்சியை ஏற்படுத்தினார்.சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லை. மாட்டுக்கு கொடுக்கும் சலுகையை மனிதனுக்கு சகமனிதன் தர மறுக்கிறான். இதையெல்லாம் மனிதநேயத்துடன் மாற்றியமைத்தார் பெரியார்.நம்நாட்டினர் செல்லுமிடமெல்லாம் ஜாதியை தூக்கிக் கொண்டு செல்கின்றனர். கலிபோர்னியா சிலிகான் வேலியில் அதிகம் நம்நாட்டவர் உள்ளனர். அங்கும் ஜாதி பாகுபாடு பார்க்கின்றனர்.அமெரிக்காவிலும் இந்துத்துவாவாதிகள் புகுந்துவிட்டனர். வள்ளுவரும் மனுதர்மமும் ஒன்று என பிரச்சாரத்தை துவக்கி உள்ளனர். இதை பார்த்து அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற இளைஞர்கள் எதிர்த்து போராட துவங்கி உள்ளனர். மனுதர்மத்துக்கும்-மனித தர்மத்துக்கும் இடையே போராட்டம் வரும்போது பெரியார் எப்போதும், எங்கும் தேவைப்படுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : struggle ,humanity ,Periyar ,
× RELATED பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு