×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் முதல்வர், அமைச்சர்களுக்கு கே.என்.நேரு பதிலடி

திருச்சி, நவ.6: திராவிடர் தொழிலாளர் அணி சார்பில், அமெரிக்காவில் தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதற்கான பாராட்டு விழா, ‘அமெரிக்காவில் பெரியார்’ எனும் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று மாலை நடந்தது.திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியதாவது: இந்த விழா மேடையில் கூட்டணி கட்சியினரான காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளனர்.இவர்களை பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன். இன்று ஆளும் அதிமுகவினர் திமுக தலைவர் முக.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இன்று யாராவது பேசும்போது பதில் சொல்வீர்கள் என நினைத்தேன். ஆனால், ஒருவரும் பேசவில்லை. ஸ்டாலின் நிறைய உளறுகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

நீங்கள் ஒழுங்காக பேசுகிறீர்களா? டாக்டர் பட்டம் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொன்னவர்தான் இந்த எடப்பாடி. இவர்தான் இப்படின்னா அமைச்சர்கள் அதற்கு மேல். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யாருன்னே தெரியாது. மன்மோகன் சிங்குன்னு சொல்வாரு. செல்லூர் ராஜூ வைகை அணையில் தெர்மக்கோல் விடுவாரு. ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவை வாழ்த்துகிறாரா? திட்டுகிறாரா? எனத்தெரியாது. ஓஎஸ் மணியன் சட்டமன்றத்தில் பேசுறதையே தப்பாத்தான் பேசுறாரு. நீங்கள் எங்கள் தலைவரை குறை பேசுறீங்க. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணிக்கட்சியினர் ஸ்டாலின் குறித்து பேசுபவர்களை கண்டித்து பேசுவதில்லை. எங்களை அடித்தால் உங்களை அடித்ததாகத்தான் அர்த்தம். நீங்கள்தான் முதலில் பேச வேண்டும்.

12 ஆண்டுகள் கருணாநிதி அமைச்சரவையில் பணியாற்றி உள்ளேன். சட்டமன்றத்தில் குறிப்பு பார்த்து பேசினால் கருணாநிதி கண்டிப்பார். இப்போதுள்ள அமைச்சர்கள் பக்கம் பக்கமாக பார்த்துதான் பேசுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்கின்றனர். எம்ஜிஆர் இருந்தபோதே உள்ளாட்சித்தேர்தலில் 3ல் 2 பங்கு இடங்களை திமுக கைப்பற்றியது. எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும். முதல்வராக ஸ்டாலின் வருவாரா என்பது 2021ல் தீர்மானிக்கப்படும். 2021ல் நிச்சயம் ஸ்டாலின்தான் முதல்வராக வருவார்’ என்றார்.

Tags : MK Stalin ,CM ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...