×

தேர்தல் நடத்த கோரி மனு

முத்துப்பேட்டை, நவ.6:
துறைக்காடு கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் உட்பட மீனவர் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பரவலாக முத்துப்பேட்டை பகுதியில் நடந்து வருவதால் அதிலும் முறைகேடு நடந்து வருவதாகவும் இதில் மீனவர்கள் அல்லாதவர்கள் மீனவர்கள் என்று சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் துறைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் நிஜாம் மைதீன் என்பவர் சமீபத்தில் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மீன்வளத்துறையினரிடம் வாங்கிய தகவலில் கஜா புயல் நிவாரணத்தில் பல குளறுபடிகள், மீனவர்கள் அல்லாதவர்களுக்கு நிவாரணம், இறந்தவர்கள் பெயரில் நிவாரணம் என பல மோசடி நடந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிஜாம் மைதீன் தலைமையிலான மீனவர்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார்மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் பதில் இல்லை. இதனால் விரக்தியடைந்த மீனவர்கள் கஜா புயல் நிவாரணத்தில் நடந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், துறைக்காடு மீனவர் சங்கத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த அரசை வலியுறுத்த வேண்டும் என கோரி நேற்று திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசனிடம் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் நிஜாம் மைதீன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன் உள்ளிட்ட மீனவர்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கவனத்திற்கும், தமிழக அரசு கவனத்திற்கும் எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என திமுக எம்எல்ஏ ஆடலரசன் அவர்களிடம் கூறினார்.

Tags : election ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...