×

காவிரி அம்மன் ரத யாத்திரை சார்பில் குடந்தை காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு

கும்பகோணம், நவ. 6: அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று கும்பகோணம் வந்தது. பின்னர் காவிரி நதிக்கு சிறப்பு ஆராத்தி காண்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தில் காவிரி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பூம்புகார் வரை காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை நடைபெறும். இந்தாண்டு கடந்த 21ம் தேதி விழிப்புணர்வு ரத யாத்திரை தலைக்காவிரி குடகில் துவங்கியது. 800 கிலோ மீட்டர் தூரம் 20 நாட்களை கடந்து வருகிற கடைமுழுக்கு தினமான 8ம் தேதி பூம்புகாரில் காவிரி சங்கமத்தில் நிறைவடைகிறது.இதில் நதிகளை தூய்மையாக வைத்திருத்தல், பராமரித்தல், தொடர்ந்து பாதுகாத்து, நதிகளுக்கு நன்றி செலுத்தி வணங்குதல் என்ற அடிப்படையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கும் இந்த யாத்திரையை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. யாத்திரையின்போது பல்வேறு ஊர்களில் ஆங்காங்கே உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் ரதத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

அதன்படி நேற்று இந்த யாத்திரை கும்பகோணம் புறவழி சாலைக்கு நேற்று வந்தது. அரசு கவின் கலைக்கல்லூரி அருகில் தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை சார்பில் காவிரி ரகத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி ரதயாத்திரை கும்பகோணம் பகுதி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் மற்றும் யாத்திரை திட்ட ஒருங்கிணைப்பாளர் கோரக்கர் சுவாமி, கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம்முரளி, துணைத்தலைவர் ரத்தினசாமி, ராமச்சந்திர ராஜா பங்கேற்றனர். இதைதொடர்ந்து கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் கோடீஸ்வரர் இறைப்பணி மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நேற்று மாலை 6 மணிக்கு கும்பகோணம் காவிரி படித்துறையில் காவிரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு காவிரி நதிக்கு மங்கள ஆராத்தி காட்டப்பட்டது.


Tags : Cauvery River ,
× RELATED கார்த்திகை தீப வழிபாடு