×

கும்பகோணம் உப்புகார தெருவில் பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கும்பகோணம், நவ. 6: கும்பகோணம் உப்புகாரத்தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் உப்புகாரத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகம், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள் உள்ளன. உப்புக்கார தெரு சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக உப்புகாரத்தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அடைத்து கொண்டதால் கழிவுநீர் கொப்பளித்து வெளியேறி சாலையில் ஓடுகின்றன.தற்போது மேன்ஹோல் முழுவதும் அடைத்து கொண்டதால் கடந்த 2 நாட்களாக உப்புகாரத்தெரு முழுவதும் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. இந்த கழிவுநீர் வீடுகளுக்கு முன்புறமும், வணிக நிறுவனங்களுக்கு முன்புறமும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது, விரைவில் சீர் செய்து விடுகிறோம் என பதில் கூறுகிறார்கள். கும்பகோணம் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நின்றால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே கும்பகோணம் உப்புகாரத்தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்றி அடைத்துள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kumbakonam ,Uppukara Street ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...