×

திருவிடைமருதூர் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கும்பகோணம், நவ. 6: திருவிடைமருதூர் வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரவி்ச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் சம்பா மற்றும் தாளடி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் விதைப்பு பொய்த்து போதல், நடவு செய்ய இயலாத சூழ்நிலை, பயிர் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பீடுகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. திருவிடைமருதூர் பகுதி விவசாயிகள் நடப்பு பருவத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யும் விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

நெற்பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.465 செலுத்த வேண்டும். காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.31 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்ய வேண்டும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்ய வேண்டும்.பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பம், சிட்டா, அடங்கல், வங்கி புத்தகத்தின் முதல்பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகர் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா