×

மயிலாடுதுறையில்சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பட்டி திறக்க வேண்டும்

மயிலாடுதுறை, நவ.6: மயிலாடுதுறையில் சாலையில் திரியும் கால்நடைகளை தடுக்க பட்டி எனப்படும் பவுண்ட் திறக்க மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் சாகுபடிகளை தின்று அழிக்கும் கால்நடைகளை பிடித்து கட்ட கால்நடை பட்டி என அழைக்கப்படும் பவுண்ட் அனைத்து ஊர்களிலும் செயல்பட்டு வந்தது. இந்த கால்நடை பட்டியில் அடுத்தவர்கள் வீட்டு வயலிலோ தோட்டத்திலோ ஏதேனும் கால்நடைகள் குறிப்பாக ஆடுகள், மாடுகள், குதிரை மேய்ந்து சேதப்படுத்திவிட்டால் அதனை நேரடியாக பாதிக்கப்பட்டவர் கேட்கும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து இது போன்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தி, பொதுவான இடத்தில் மேற்படி பாதிப்பை ஏற்படுத்திய மாட்டினையோ, ஆட்டினையோ பிடித்து கட்டிவிடுவார்கள். அதன் பிறகு அந்த கால்நடைக்கு உரியவருக்கு தகவல் கொடுத்து அழைத்து வந்து அபராதம் அல்லது தண்டனை விதித்து மீண்டும் கால்நடையை வெளியில் விடாத அளவிற்கு ஒழுங்குபடுத்தி எச்சரித்து அனுப்புவார்கள்.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் முறையாக கட்டிப்போட்டோ அல்லது தங்களின் நிலத்தில் வைத்தோ பாதுகாத்து பராமரித்து வந்தார்கள். இந்த பட்டி அல்லது பவுண்ட் முறையால் மக்களுக்கு பெரும் நன்மைகள் ஏற்பட்டன. அதற்காக தனியாக ஆட்களை நியமித்து விதிக்கப்படுகின்ற அபராதத்திலிருந்தே அவர்களுக்கு சம்பளம் மற்றும் பிடிக்கப்படுகின்ற கால்நடைகளுக்கு தீவனம் உணவு அளிக்கப்பட்டும் வந்தது. அதுபோன்றதொரு நடைமுறை பல்வேறு நகராட்சிகளில் இன்னும் பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கடந்த 2016ல் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கூட, பழுதடைந்து 40 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்து வந்த கால்நடை பட்டி எனப்படும் பவுண்ட், வேதாரண்யம் பகுதி வர்த்தக சங்கத்தினர் அதன் தலைவர் தென்னரசு முயற்சி எடுத்து பல்வேறு கோரிக்கைகளை அன்றைய நாகை கலெக்டர் பழனிசாமியிடம் தெரிவித்ததன் பலனாக வேதாரண்யத்தில் புதியதாக கால்நடைபட்டி, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அமைத்திருந்த பழைய இடத்திலேயே பட்டி அமைக்கப்பட்டது. அதை நிர்வகிக்க அனைத்து பொறுப்புகளும் வேதாரணியம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.அதனைப்போல மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகளில், குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி பேரூராட்சிகளிலும், செம்பனார்கோவில், கொள்ளிடம், பூம்புகார் சங்கரன்பந்தல், நீடூர், வள்ளாலகரம், வடகரை போன்ற பெரிய ஊராட்சிகளிலும் கால்நடை பட்டி எனப்படும் பவுண்ட்களை புதியதாக ஏற்படுத்திடவேண்டும். அப்போதுதான் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் ஆடுகள் மாடுகள் குதிரைகள், மற்றும் பன்றிகளை கட்டுப்படுத்திட முடியும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தரம் கூறுகையில்,கடந்த சில ஆண்டுகளாக ஆடுகள் மாடுகள் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட சாலைவிபத்துகளும் அதில் ஏற்பட்ட உயிர்பலியும் அதிகமாகும். மேலும் கால்நடை உரிமையாளர்கள் குறிப்பாக மாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகள் பால் கொடுக்கும் காலங்களில் கட்டிப்போட்டு வளர்க்கிறார்கள்.
பால் கொடுக்கும் தன்மை இல்லாதபோது அவற்றிற்கு ஏன் தீனி போடவேண்டும் என்று கருதி வெளியில் திரிய விட்டுவிடுகிறார்கள். மேலும் அவ்வாறு திரியும் மாடுகளுக்கு உரிய உணவு கிடைக்காததால் சுவரொட்டிகளையும் பிளாஸ்டிக் பைகளையும், கழிவுப்பொருட்களையும் உட்கொள்கின்றன. ஆகவே இதுபோன்ற தவறுகளை தவிர்க்கவும் தடுக்கவும், மேலும் கால்நடைகள் கடைகளில் உள்ள பொருட்களை தின்றும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சுற்றி திரிகிறது. விவசாயிகள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே கால்நடைப்பட்டி எனப்படும் பவுண்ட் திறப்பது மிகவும் அவசியமானதாகும். கால்நடை பட்டி திறக்கும் நேரம், அபராத தொகை ஆகியனவற்றையும் தீர்மானித்து, கால்நடை பட்டி திறந்து செயல்படுகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்திட வேண்டும்.
கால்நடை பட்டி தொடர்ந்து முறைப்படி செயல்பட தகுந்த விளம்பரங்கள் செய்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...