×

மழை காலங்களில் நெற்பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்

நிவர்த்தி செய்யும் முறைகள்: பயிர்களில் தழைச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு மழை இல்லாதபோது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு இவற்றை கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தையும் கலந்து நெல் வயலில் சீராக இட வேண்டும். இலைவழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது மணிச்சத்து கிடைக்க டிஏபி உரத்தை 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும்.அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து அந்த தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறை: தற்போது நிலவும் மந்தமான நிலையில் இலைச்சுருட்டுப்புழு, குருத்து ஈ மற்றும் புகையான் போன்ற பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதில் இலைச்சுருட்டுப்புழு தாக்கப்பட்ட வயல்களில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு பட்டுப்போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டு புழுக்கள் உள்ளே இருந்து கொண்டு இலைகளை சுரண்டி, இலைகளில் உள்ள பச்சையம் சுரண்டப்பட்ட இடங்களில் நீளவாக்கில் வெள்ளை நிறத்தில் பட்டையாக காணப்படும்.

இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது குளோரன்ட்ரான்லிபுரோல் 60 மில்லி அல்லது புரோபினோபாஸ் 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். பாக்டீரியா இலைக்கருகல் நோய் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையால் நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோய் நாற்றங்காலில் நாற்றுகளை தாக்குவதுடன் நடவு வயலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறியானது தாக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி பக்கவாட்டில் மஞ்சள் நிறமடைந்து பின்னர் கருகி காணப்படும்.

வைக்கோல் நிறமுடைய காய்ந்த பகுதியானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், ஒரங்களிலிருந்து நடுநரம்பை நோக்கியும் நெளிந்து அலை போன்று நீண்ட கோடுகளுடன் தனித்து காணப்படும்.இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அந்த தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து விவசாயிகள் பயனடையலாம்.இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது