×

தனியார் நிலங்களில் உள்ள 57 ஆழ்குழாய் கிணறுகள் ஒரு வாரத்திற்குள் மூட உத்தரவு

திருப்பூர், நவ.6: திருப்பூர், மாவட்டத்தில்  மூடப்படாத தனியார் நிலங்களில் உள்ள 57ஆழ்குழாய் கிணறுகளை ஒருவார காலத்திற்குள் மூட வேண்டும் அல்லது மழைநீர் சேகரிப்பாக மாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுதல் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது: ஆழ்குழாய் கிணறு அமைக்கும் நில உரிமையாளர்கள் அவற்றை அமைப்பதற்கு 15 தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி, கிராம ஊராட்சி தலைவர், சட்டரீதியான வேறு அரசு அதிகாரிகள், நிலத்தடி நீர் துறையைச் சேர்ந்த உரிய அலுவலர்கள், பொது சுகாதாரம், நகராட்சிகள் ஆகியவற்றில் தங்கள் பகுதிக்கு உரிய அலுவலரிடம் ஆழ்குழாய் கிணறு அமைப்பது குறித்து தகவல் அளிக்க வேண்டும். அரசு, தனியார் ஆழ்குழாய் அமைக்கும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கண்டிப்பாக பதிவு செய்திடல் வேண்டும். பணி மேற்கொள்ளும் நிறுவனத்தின் முழு முகவரி, ஆழ்குழாய் அமைக்கும் நிலத்தின் உரிமையாளரின் முகவரி விபரங்கள் ஆழ்துழாய் கிணறு தொடர்பான பணி ஆகிவை குறித்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பொழுது தகவல்களுடன் அவ்விடத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

மேற்கொள்ளும் இடத்தைச் சுற்றிலும் முற்கம்பிவேலி அல்லது பாதுகாப்பான தடுப்பு அமைக்கப்படவேண்டும். பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை, கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில், திறந்த நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை முறையாக மூடிவைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, ஆகியவை குறித்து மாவட்ட, வட்டார, கிராம பகுதிகளின் விபரம் மாவட்ட அளவிலும் கிராம பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் விவசாய துறையினராலும் பராமரிக்கப்பட வேண்டும். நகராட்சி பகுதிகளை பொறுத்தளவு மேற்படி பணிகளை இளநிலை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் நிலத்தடி நீர்வள துறை, பொது சுகாதாரம் மற்றும் நகராட்சிகளால் பராமரிக்கப்பட வேண்டும்.
ஒரு ஆழ்குழாய் கிணறு கைவிடப்பட்டால் மேற்சொன்ன அலுவலர்கள் எவரேனும் ஒருவரிடம் இருந்து மேற்படி கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு மூடி நிரப்பப்பட்டது என்ற சான்றினை கண்டிப்பாக பெற வேண்டும். கண்டறியப்பட்டுள்ள மூடப்படாத தனியார் நிலங்களில் உள்ள 57 ஆழ்குழாய் கிணறுகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒருவார காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் மூடி அல்லது பாதுகாப்பான முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றி புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வருவாய் வட்டாட்சியர்கள் பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகள் தொடர்பாக தங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவித்து பாதுகாப்பாக மூடப்பட்ட அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றியமைத்த விபரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகைப்படங்களுடன் தெரிவிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தங்களது துறையின் மூலம் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் உறிஞ்சு கிணறுகள் ஆகியவற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் தனியே விளையாடவோ இதர காரணங்களுக்காகவோ செல்வதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்திடவும், வீட்டில் உள்ள நேரங்களில் தனியாக விளையாடவோ இதர காரணங்களுக்காகவோ செல்வதை பெற்றோர்கள் கண்காணித்திடவும் அறிவுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகள் தனியே விளையாடவோ இதர காரணங்களுக்காகவோ செல்வதை அங்கன்வாடி அமைப்பாளர்கள் கண்காணித்திட வேண்டும். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் துணை கலெக்டர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்