×

கைகாட்டிப்புதூர் பூங்காவில் குப்பை பிரித்தெடுக்கும் உரக்களம்

அவிநாசி,நவ.6:  அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கைகாட்டிப்புதூர் வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்தெடுக்கும் உரக்களத்தை மாவட்ட  கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.              
அப்போது, அவர் கூறுகையில், ‘‘அவிநாசி பேரூராட்சிக்குடப்ட்ட 18 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கைகாட்டிப்புதூர் வளமீட்பு பூங்காவில், 89 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள உரக்களத்தில்  சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை கொண்டு விண்ட்ரோ முறையில் மாட்டுச்சாணம் தெளித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பி விட்டு, ஆண்டுக்கு 23 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், இயற்கை உரம் காய்கறி கழிவு கொண்டு மண்புழு உரம் தயாரித்து விற்கப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள வளமீட்பு  பூங்காவில் துளசி, நொச்சி, தூதுவளை, பிரண்டை, ஆடாதொடை உள்ளிட்ட மூலிகை செடிகளும், நாட்டு மரங்களான வேம்பு, புங்கன், அரசமரம், அத்தி, மலைவேம்பு, புளியமரம், நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்களும், நர்சரி முறையில் வளர்க்கப்பட்டுவருகிறது.

பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் நட்டு பாதுகாத்தும் பசுமை சாலைத்திட்டம் என்ற மரம் வளர்ப்புத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அரசு அலுவலர்கள் உரியமுறையில் பராமரித்திட வேண்டும்,’’ என்றார். முன்னதாக, அவிநாசி அரசு மருத்துவமனையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த பார்வையாளர்கள் தங்கும் இடத்தினை விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தெக்கலூர் ஊராட்சியில், சீரமைக்கப்படவுள்ள 3.05 ஏக்கர் பரப்பளவிலான  கவுசிகா குளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் பழனிச்சாமி, அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வர மூர்த்தி, அவிநாசி தாசில்தார் சாந்தி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிஹரன், சாந்திலட்சுமி(கிராம ஊராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kaikattipputhur Park ,
× RELATED தெலுங்குபாளையம், செல்வபுரத்தில்...