×

நொய்யல் தடுப்பணை கதவு பழுது நிரம்பி வழியும் நீரால் விவசாயிகள் அச்சம்

வெள்ளகோவில், நவ.6: முத்தூர் அருகே  நொய்யல் ஆற்றின் குறுக்காக சின்னமுத்தூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் கதவுகளை உயர்த்தும் உதவும் இயந்திர பாகங்கள் அனைத்தும் உடைந்து ஷட்டர்களை உயர்த்த முடியாமல் போனது. இதனால் 9 கதவுகளை மூழ்கடித்தபடி நீர் நிரம்பி வழிந்து செல்வதால் அணையின் கீழ்பகுதி நொய்யல் கரையோர மக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். அணையின் தண்ணீர் தேங்கும் பகுதியின் அருகே கரைகளை உடைத்து கொண்டு நெல் பயிரிடப்பள்ள விவசாய நிலங்களில்  தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.  இதனால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகாவில் 300 ஏக்கர் பரப்பளவுள்ள கார்வழி அணைக்கும் திருப்பூர் கரூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது 2004க்கு பிறகு நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்டதால், மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு பழைய கதவுகள் அகற்றப்பட்டு ரூ.7 கோடி ரூபாய் செலவில் புதிய கதவுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நொய்யலில் வந்த வெள்ள நீர் கார்வழி ஆத்துப்பாளையம்  அணைக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீரும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கால்வாய் மூலம் கார்வழி ஆத்துப்பாளையம்  அணைக்கு சென்றது. இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை கார்வழி அணை நிரம்பியதை அடுத்து, கால்வாயில் செல்லும் நீரினை நிறுத்தி மீண்டும் தண்ணீரை நொய்யல் ஆற்றில் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணையின் 9 மதகுகளையும் உயர்த்த முயற்சித்தனர். ஆனால் தரமில்லாத பொருட்கள் போடப்பட்டிருந்ததால், கதவுகளை உயர்த்த உதவும் பற்சக்கரங்களும் இயந்திர பாகங்களும் உடைந்து போனது. இதனால் கதவுகளை உயர்த்தமுடியவில்லை. இதன் காரணமாக ஆற்றில் வரும் தண்ணீர் 9 கதவுகளையும் மூழ்கடித்தபடி நிரம்பி வழிந்து வருகிறது.

இந்நிலையில், தடுப்பணைக்கு கீழ் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள அஞ்சூர்,துக்கச்சி உள்ளிட்ட வழியோர கிராமங்களில் உள்ள விவசாயிகள், அணையின் கதவுகள் உடைந்து விடுமோ என பெரும் அச்சமடைந்துள்ளனர். அதே நேரம் அணையின் மேல்பகுதியில் தேங்கும் தண்ணீர் கரைகளை உடைத்துகொண்டு விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படையும் நிலைஏற்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவு செய்தும் பயனின்றி போனது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உடனடியாக ஷட்டர்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Noel ,
× RELATED 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை