பந்தகாப்பு ஓடோடும் வயல் பகுதியில் முழுமை பெறாத ஆதிவாசி வீடுகள்

பந்தலூர், நவ. 6 : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி பிதர்காடு பந்தகாப்பு  ஓடோடும் வயல் ஆதிவாசி சாலையில் 30  ஆதிவாசி குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். இதில்  பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தின் மூலம் 19 ஆதிவாசி பயனாளிகளை தேர்வு செய்து ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்காக கடந்த 2018 ஏப்ரல் மாதம் பணி உத்தரவு வழங்கப்பட்டது அதன்பின் ஒப்பந்ததாரர் மூலம் வீடுகட்டுவதற்கு ஒருசில பயனாளிகளுக்கு  அடித்தளம் அமைக்கப்பட்டு கட்டுமானப்பணி மேற்கொண்டனர்.

அப்போது, வனத்துறையினர் குறுக்கிட்டு ஆதிவாசி மக்கள் குடியிருக்கும் இடம் மற்றும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி கட்டுமானம் பொருட்கள் எடுத்து செல்வதற்கும் வீடுகட்டுவதற்கும் தடை விதித்தனர். இதனால், ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டும் பணி முடிவு பெறாமல் பாதியில் நின்றது. சொந்த வீடு கனவில் இருந்த  ஆதிவாசி மக்கள் குடியிருந்து வந்த குடிசை வீடுகளையும் உடைத்து விட்டு தற்போது குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்று  கூடலூர் எம்எல் ஏ திராவிடமணி ஆதிவாசி மக்களை சந்தித்து ஆய்வு செய்தார். ஆதிவாசி மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை எம்எல்ஏ விடம் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று கிடப்பில் இருக்கும் வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories: