×

கோவை மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட காலக்கெடு

கோவை, நவ. 6: கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை வரும் 10ம் தேதிக்குள் முழுமையாக மூடவேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாவட்ட கலெக்டர்  ராஜாமணி கூறியதாவது:
தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில்  அரசு துறைகள் மூலமாகவும், தனிநபர் விவசாய நிலங்கள் மற்றும் தனிநபர் வணிக நோக்கத்திற்காகவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அதனை பாதுகாப்பான முறையில் மூடி வைக்கவும்  ஏற்கனவே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் தனியார் நிலங்களில் 1427 ஆழ்துளை கிணறுகளும் அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் இடங்களில் 1714 ஆழ்துளை கிணறுகளும் இதுவரை கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் 121 ஆபத்தான திறந்தவெளி கிணறுகளும் கண்டறியப்பட்டு இதுவரை 58 கிணறுகள் முறையாக மூடி போடப்பட்டுள்ளன. 616 பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்புகளாக  மாற்றப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடும் பணியில் வருவாய்த் துறையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் வளர்ச்சி துறையில் ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் நிலை அலுவலர் ஆகியோர் இப்பணியினை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைகளின்படி பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இந்நிலையில் வரும் 10ம் தேதிக்குள் அரசு மற்றும்  தனிநபர் நிலங்களில் உள்ள பயன்பாடற்ற அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும். அவ்வாறு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் அரசு நிலங்களில் அமைந்திருந்தால் தொடர்புடைய அரசு அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கோவை மாவட்டத்தில் புதியதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்புடன் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவேண்டும். அனுமதிபெற்ற போர்வெல் வண்டிகளை கொண்டுதான் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவேண்டும்.
கோவை மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மீண்டும் ஏதேனும் இருக்கிறதா? என உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு 100 விழுக்காடு மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். பொதுமக்களும் தங்களது இடங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை  மூடி பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Tags : wells ,Coimbatore district ,
× RELATED அகரத்தில் ஆறு உறைகிணறுகள் திசை மாறிய வைகை ஆற்றிற்கு சான்று