×

சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் காயம்

சென்னிமலை, நவ.6: சென்னிமலை அருகே மலை கணுவாய் பாதையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 9 பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்ட சென்னிமலை கவுந்தப்பாடி அருகே பெருமாபாளையம் காலனியில் வசிப்பவர் மாறன் (60), இவர், கடந்த 3ம் தேதி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். இவருக்கு திருமணமான மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்கள் உள்ளூரில் வசித்து வருகின்றனர். சாந்தி என்பவர் மட்டும் காங்கயம் அருகே குப்பநாய்க்கன் வலசு பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களது குடும்ப வழக்கப்படி ஈமச்சடங்கு முடிந்த பிறகு பெண்களை வீட்டில் விட்டு வர சரக்கு ஆட்டோவில் உறவினர்கள் 22 பேர் நேற்று காங்கயம் சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை பட்டத்தரசு (32) என்பவர் ஓட்டினார். சென்னிமலை மலை கனுவாய் பாதையில் உள்ள திருப்பத்தில் பாரம் தாங்காமல் ஆட்டோ சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியின் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மல்லிகா (45), ஆராயி (55), அமராவதி (28), சாந்தி (26),  துளசிமணி (33), பழனியம்மாள் (45), மல்லிகா (37), ருக்குமணி (42), செம்பாள் (52) குமார் (36), சண்முகம் (50), சுப்பிரமணி (55),  கிருஷ்ணமூர்த்தி (45), சகாதேவன் (50) பட்டத்தரசு (32) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார், சரக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி வந்த ஓட்டுனர் பட்டத்தரசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : cargo crashes ,Chennimalai ,
× RELATED ஐடி to கைத்தறி நெசவு! சென்னிமலை இளைஞரின் இலட்சியப் பயணம்