×

ரூ.10 லட்சம் குத்தகை பாக்கி சைக்கிள் ஸ்டாண்டுக்கு சீல் வைப்பு

ஈரோடு, நவ. 6: ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி தொகையை சைக்கிள் ஸ்டேண்ட் உரிமையாளர் செலுத்தாததால் நேற்று சைக்கிள் ஸ்டாண்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாநகராட்சி சார்பில் வணிக வளாகங்கள், கட்டண கழிப்பறைகள், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள், சைக்கிள் ஸ்டாண்டுகள் ஆகியவற்றை ஏலம் விட்டு அதன்மூலம் மாநகராட்சிக்கு வருவாயை ஈட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகை பாக்கி வைத்துள்ள நிலுவைதாரர்கள் பாக்கியை செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாடகை நிலுவை வைத்திருந்த கடைக்காரர்கள் தொகையை செலுத்தினர். இந்நிலையில் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.21 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுத்தவர்கள் மாதந்தோறும் குத்தகை தொகை செலுத்த வேண்டும். அடுத்தாண்டு மார்ச் மாதம் சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை காலம் முடிகிறது. ஆனால், குத்தகை எடுத்த குத்தகைதாரர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் இதுவரை பணம் செலுத்தவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட சைக்கிள் ஸ்டாண்டிற்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று உதவி ஆணையர் (வருவாய்) குமரேசன், உதவி வருவாய் அலுவலர் வசந்தி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டிற்கு சீல் வைத்தனர்.

ஸ்டாண்டின் ஒருபுறம் உள்ள நுழைவாயில் பகுதியில் சீல் வைக்கப்பட்டு மற்றொரு பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்தியவர்கள் தங்களது வாகனங்களை எடுத்து செல்லும்படியும், வாகனங்கள் உள்ளே நிறுத்த கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். சைக்கிள் ஸ்டாண்டை குத்தகை எடுத்த குத்தகைதாரர்கள் தொகையை செலுத்தாவிட்டால் மாநகராட்சி நிர்வாகமே வாகன கட்டணத்தை வசூல் செய்யவும், குத்தகை நிலுவை தொகையை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்குள் போக்குவரத்து மாற்றம்