×

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் ஆக்கிரமிப்பு இடங்களை அளவிடும் பணி தீவிரம்

மொடக்குறிச்சி, நவ.6:  கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் முன்பு உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் நேற்று அளவிடும் பணியில் ஈடுபட்டனர். கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந் நிலையில், இந்த கோயிலுக்கு அருகில் 63 நாயன்மார்கள் மடம், திருமண மண்டபம், காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள புகழுரான் வாய்க்கால் கரை, மகுடீஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்து இடத்தை மீட்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று கொடுமுடி தாசில்தார் சிவசங்கரன்,  கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று 63 நாயன்மார்கள் மடம் வாய்க்கால் கரை மகுடேஸ்வரர் கோயில் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,`பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அளவீடு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து தற்போது அளவீடு செய்யும் பணி நடந்தது. இதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து பின், மேல் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.

Tags : Kodumudi Makudeswarar Temple ,
× RELATED கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பெயரை மாற்ற பா.ஜ., எதிர்ப்பு