×

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்கக்கோரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.6: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் புதைவட மின்கேபிள் திட்டம் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளை தோண்டி உள்ளனர். பல்வேறு இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டும் சாைலகள் சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருங்கல்பாளையம் காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.  இதில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் மோசமாக சாலைகளை சீரமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி கந்தசாமி, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட அவை தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னையன், செந்தில்குமார், பகுதி கழக செயலாளர்கள் குறிஞ்சி தண்டபாணி, ராமச்சந்திரன், வி.சி.நடராஜன், நிர்வாகிகள் கேபிள் செந்தில்குமார், சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வழக்கறிஞர் ரமேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி மணி, தலைமை கழக பேச்சாளர் இளையகோபால், மகளிரணி நிர்வாகிகள் இளமதி, திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,DMK ,dirt roads ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...