×

பெருந்துறை சிப்காட் பகுதியில் ஆலை கழிவுநீரால் 10 கிராமங்கள் பாதிப்பு

ஈரோடு, நவ.6: பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீரால் 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க அரசு அனுமதிக்க கூடாது என விவசாய சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான காற்றும், இயற்கையான சூழலும் கொண்டிருக்கும் இடமாக இருந்த காரணத்தினால் பெருந்துறையை தேர்வு செய்து காசநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. இந்த வளாகத்திற்குள் தற்போது மருத்துவ கல்லூரியும், மருத்துவமனையும் இயங்கி வருகிறது. பெருந்துறையை ஒட்டி சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இயங்கி வரும் ஆலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பை பல நேரங்களில் பின்பற்றுவதில்லை. சிப்காட்டிற்கு அருகில் ஒடையக்காட்டூரில் 14 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையில் தற்போது ஆலைகளால் மாசுப்படுத்தப்பட்ட கழிவுநீரே தேங்கியுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் குடிநீர் ஆதாரங்கள் கெட்டு போய்விட்டது.

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தொலைதூரத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த குட்டையில் தேங்கியுள்ள நீரை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கு சினை பிடிப்பதில்லை. சில நேரங்களில் இந்த குட்டை நீரை குடிக்கும் கால்நடைகள் இறந்து போயுள்ளது. சிப்காட் வளாகத்திற்குள் காலியாக இருக்கும் இடத்தில் புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த அரசு அனுமதிக்க கூடாது. அந்த காலியிடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரங்களை நட்டு வளர்க்க அரசு முன்வர வேண்டும். சிப்காட் வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமங்களிலும் நிலத்தடி நீர் கொண்டிருக்கும் உப்பு அளவு 7 ஆயிரம் டிடிஎஸ்.,க்கு மேல் உள்ளது. காற்றும் வெகுவாக மாசடைந்துள்ளது. இந்த பகுதிகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த மாசுப்பட்ட காற்று பெருந்துறை பகுதி மக்களை பாதிக்கும். இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நல்லசாமி கூறி உள்ளார்.

Tags : villages ,Perundurai ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை